நிலவின் மேல்பரப்பில் ஆய்வு பணிகளை தொடங்கியது ரோவர்


நிலவின் மேல்பரப்பில் ஆய்வு பணிகளை தொடங்கியது ரோவர்
x

நிலவில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர் தனியே நகர்ந்து தனது ஆய்வு பணியை தொடங்கி உள்ளது என இஸ்ரோ அறிவித்து உள்ளது.

பெங்களூரு,

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ந்தேதி பூமியில் இருந்து அனுப்பப்பட்டது. விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், பின்னர் நேற்று மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்குவதில் வெற்றியடைந்தது.

தொடர்ந்து, நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் இஸ்ரோவுக்கு தனது முதல் தகவலை அனுப்பியது. அதில், இந்தியா, இலக்கை நான் அடைந்து விட்டேன். நீங்களும் கூட! என்று தெரிவித்தது.

இதனையடுத்து, நிலவில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர் தனியே நகர்ந்து தனது ஆய்வு பணியை தொடங்கி உள்ளது என இஸ்ரோ அறிவித்து உள்ளது.

லேண்டரில் உள்ள அனைத்து ஆய்வு கருவிகளும் செயல்பட தொடங்கியுள்ளன. தொடர்ந்து, அறிவியல் ஆய்வு பணிகள் தொடங்கி உள்ளன என இஸ்ரோ அறிவித்து உள்ளது.

லேண்டரில் ILSA, RAMBHA, chaSTE ஆகியவற்றின் செயல்பாடுகள் இயக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று, நிலவின் மேல்பரப்பில் உள்ள மண்ணின் தன்மை, வளிமண்டலம் உள்ளிட்ட விசயங்களை பற்றி ரோவர் ஆய்வு பணிகளை மேற்கொள்ளும். உந்து விசைக்கலன் அமைப்பு கடந்த ஞாயிறு முதல் தனித்து செயல்பட்டு வருகிறது என்றும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

நிலவின் மேல்பரப்பில் மண்ணில் உள்ள ரசாயன பொருட்களின் தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும். நிலவில் உள்ள பாறைகள் மற்றும் மண்துகள்களில் அலுமினியம், சிலிக்கான், பொட்டாசியம் உள்ளிட்ட தனிமங்களை பற்றி ஆய்வு நடைபெறும். ரோவரில் உள்ள 2 கேமராக்கள், லேண்டர் எவ்வளவு தொலைவில், எந்த திசையில் உள்ளது என்ற விவரங்களை தெரிந்து கொள்ள உதவும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.


Next Story