அதானி குறித்து கேள்வி எழுப்பியதால் ஆளும்கட்சியே நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கினர்; ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு
அதானி குறித்து கேள்வி எழுப்பியதால் ஆளும்கட்சியே நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கியதாக கோலாரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கூறினார்.
பெங்களூரு:
சிறை தண்டனை
நீரவ் மோடி, லலித் மோடி போன்றோர் வங்கியில் கடன் பெற்று நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டனர். அந்த நேரத்தில் அதாவது கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கி பேசிய ராகுல் காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி வங்கியின் கடன் பெற்று ஓடிவிட்டதாகவும், மோடி (பிரதமர் மோடி) பெயர் கொண்டவர்கள் திருடர்களாக உள்ளனர் என்றும் குற்றம்சாட்டி பேசினார்.
இதன் மூலம் ராகுல் காந்தி மோடி சமூகத்தை அவமதித்துவிட்டதாக கூறி குஜராத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ., ஒருவர் சூரத் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இது இந்திய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்திக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்யும்படி நோட்டீசு அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் அந்த பங்களாவை காலி செய்து வேறு வீட்டில் குடியேறியுள்ளார்.
ஜெய் பாரத் பொதுக்கூட்டம்
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு விவகாரம், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து உள்ளது. அனைத்துக்கட்சி தலைவர்களும் அவரது பதவி பறிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கோலாரில் பேசிய பேச்சுக்காக தான் அவரது பதவி பறிபோய் உள்ளது. அதே கோலாரில் இருந்தே கா்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். தனது பதவி பறிப்பு நடவடிக்கைக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். கர்நாடக காங்கிரஸ் சார்பில் 'ஜெய் பாரத்' பெயரில் கட்சி பொதுக்கூட்டம் கோலாரில் நேற்று நடைபெற்றது. கர்நாடக சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு பிறகு கர்நாடகத்தில் ராகுல்காந்தி பங்கேற்கும் முதல் கூட்டம் இதுவாகும். இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-
பிரதமர் மோடியின் ஆட்சியில் செயலாளர் பதவியில் இருப்பவர்களில் 7 சதவீதம் பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட, தலித் சமூகங்களை சேர்ந்தவர்கள். அந்த மக்கள் மீது மோடிக்கு இருக்கும் அக்கறை இது தானா?. கடந்த 2011-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தலித் சமூகங்களின் மக்கள்தொகை எவ்வளவு என்பதை மத்திய அரசு பகிரங்கப்படுத்த வேண்டும்.
விரயம் செய்ய கூடாது
அதற்கேற்ப அந்த சமூகங்களுக்கு அரசின் திட்டங்களை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த சமூகங்களுக்கு துரோகம் இழைத்தது போன்றது ஆகும். கர்நாடகத்தில் விரைவில் காங்கிரஸ் ஆட்சி அமைய உள்ளது. இந்த அரசு மாநிலத்தின் பெண்கள், இளைஞர்கள், ஏழைகளுக்கு என்ன செய்ய போகிறது என்பதை நான் உங்களிடம் கூறுகிறேன். இமாசல பிரதேச தேர்தலின்போது, மக்களுக்கு அளிக்கும் முக்கியமான 2, 3 வாக்குறுதிகளை உடனே அமல்படுத்த வேண்டும் என்று கூறினேன்.
இதை அமல்பத்த ஆண்டு கணக்கில் கால விரயம் செய்ய கூடாது என்று கூறினேன். இதே கருத்தை கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுக்கும் கூறுகிறேன். நாங்கள் கர்நாடக மக்களுக்கு 4 முக்கியமான உத்தரவாத வாக்குறுதியை அளித்துள்ளோம். கிருஹ ஜோதி திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவது, கிரஹ லட்சுமி திட்டத்தின் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.2,000 வழங்குவது, அன்ன பாக்கிய திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்களுக்கு மாதம் தலா 10 கிலோ அரிசி வழங்குவது, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தலா ரூ.3,000 ஆயிரம் வழங்குவது ஆகிய திட்டங்களை உடனே அமல்படுத்துவோம். இந்த 4 வாக்குறுதிகளும் முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே முடிவு எடுத்து அமல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்.
40 சதவீத கமிஷன்
பிரதமர் மோடி, அதானி போன்றோருக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வழங்குகிறார். அதே போல் நாமும் நாட்டின் ஏழை மக்களுக்கு இத்தகைய திட்டங்களை வழங்க முடியும். நீங்கள் (பிரதமர்) இதய பூர்வமாக அதானிக்கு உதவி செய்தால் நாங்கள் நாட்டின் பெண்கள், இளைஞர்கள், ஏழை மக்களுக்கு உதவிகளை செய்கிறோம். கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு என்ன செய்தது.
40 சதவீத கமிஷன் பெற்று ஊழல் செய்துள்ளனர். எல்லா பணிகளிலும் 40 சதவீத கமிஷன் பெற்றுள்ளனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன முறைகேடு, கல்லூரி பேராசிரியா் நியமன முறைகேடு, என்ஜினீயர்கள் நியமன முறைகேடு போன்ற எல்லா நியமனங்களிலும் முறைகேடு செய்துள்ளனர். நாடாளுமன்ற கூட்டத்தில் அதானி விவகாரம் குறித்து பேசினேன்.
என்ன தொடர்பு
அப்போது எனது மைக்கை அணைத்து விட்டனர். பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது என்று கேட்டேன். அதுகுறித்த புகைப்படத்தை காட்டினேன். நாட்டின் விமான நிலையங்கள் அதானிக்கு வழங்கப்பட்டது. இதற்காக விதிகளை திருத்தியது ஏன் என்று கேட்டேன். இதற்கு முன்பு விமான நிலையங்கள் அனுபவம் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டது.
அதானிக்கு போதிய அனுபவம் இல்லாத நிலையிலும் அவருக்கு விமான நிலையங்களை வழங்கியது ஏன்?. மும்பை விமான நிலையத்தை அதானிக்கு வழங்கினர். அந்த விமான நிலையத்தை அமைத்த நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடத்தி, மிரட்டி அவர்களிடம் இருந்து பறித்து அதானிக்கு வழங்கினர். ஆஸ்திரேலியாவில் மோடியுடன் அதானி இருந்தார். அதனால் அதானிக்கு எஸ்.பி.ஐ. வங்கி கடன் கொடுத்தது.
துறைமுகங்கள்
எந்த அதிகாரத்தால் அதானிக்கு கடன் கிடைத்தது?. பிரதமர் மோடி கூறியதால் இலங்கை துறைமுகங்கள் அதானிக்கு வழங்கப்பட்டதாக அந்த துறைமுக அதிகாரிகள் கூறியுள்ளனர். மோடி வங்காள தேசத்திற்கு பயணம் செய்த பிறகு அங்கு அதானிக்கு ஒப்பந்தம் கிடைத்தது. இஸ்ரேல் நாட்டில் துறைமுகங்கள், பாதுகாப்பு துறையில் அதானிக்கு ஒப்பந்தம் கிடைத்தது.
அதானியின் பினாமி நிறுவனங்கள் யாருடையது, அதில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது யாருடையது என்று கேட்டேன். அதன் பிறகு நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக ஆளுங்கட்சியே நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் செய்தது. அரசே நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுத்தது. நாடாளுமன்றத்தில் என் மீது குற்றச்சாட்டுகளை கூறினர். அதற்கு விளக்கம் அளிக்க என்னை அனுமதிக்கவில்லை.
தகுதி நீக்கம்
சபாநாயகருக்கு கடிதம் எழுதியும், நேரில் சந்தித்தும் அனுமதி கேட்டேன். ஆனால் பேச அனுமதி கிடைக்கவில்லை. அதன் பிறகு எனது எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்துவிட்டனர். இதன் மூலம் என்னை மிரட்ட முடியும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் நான் இதற்கெல்லாம் பயப்படமாட்டேன். பிரதமர் மோடிக்கு அதானியுடன் இருக்கும் தொடர்பு, அதானியின் பினாமி நிறுவனங்களில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு யாருடையது என்று இப்போதும் கேட்கிறேன்.
இந்த கேள்விக்கு பதில் கிடைக்கும் வரை நான் போராடுவேன். என்னை சிறையில் தள்ளினாலும் எனக்கு எந்த தொந்தரவும் இல்லை. ஒருவர் நாட்டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு வசதிகளை ஒப்பந்தம் பெறுகிறார். இது தான் 21-வது நூற்றாண்டின் வரலாறு. அதானியின் பாதுகாப்பு அமைப்பின் போலி நிறுவனத்தில் சீனாவை சேர்ந்தவர் இயக்குனராக உள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தவில்லை.
திசை திருப்ப முயற்சி
மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள். கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் ஒற்றுமையாக பணியாற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அறுதி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கும். 40 சதவீத கமிஷன் பணத்தை கொண்டு மீண்டும் ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதாவினர் முயற்சி செய்வார்கள். அதனால் காங்கிரஸ் குறைந்தது 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் பா.ஜனதாவின் ஊழலை நாம் தடுக்க முடியும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.