நமது ஜனநாயக கோவிலின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது - அரவிந்த் கெஜ்ரிவால்


நமது ஜனநாயக கோவிலின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது - அரவிந்த் கெஜ்ரிவால்
x

நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல், ஜனநாயக விழுமியங்களை அவமதிக்கும் செயல் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இன்று நாடாளுமன்ற தாக்குதல் தினம் என்பதால் நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் பூஜ்ஜியம் மணிநேரத்தின்போது, பார்வையாளர் அரங்கில் இருந்த இரண்டு நபர்கள் மக்களவைக்குள் நுழைந்தனர்.

அவர்கள் கண்ணீர் புகை வீசும் குப்பிகளை வைத்திருந்தனர். அவர்களில் ஒருவர் எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் டேபிள்கள் மீது தாவி சென்றார். எதிர்ப்பு முழக்கமும் எழுப்பினார். அவரைப் பிடிக்க சில எம்.பி.க்கள் முயன்றனர். பின்னர் இருவரையும் பாதுகாவலர்கள் பிடித்து கைது செய்தனர்.

அதேபோல, நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே மஞ்சள் நிற புகையை வெளியிட்டு போராட்டம் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் நாடாளுமன்ற சாலை காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "2001-ம் ஆண்டு தாக்குதலின் நினைவு நாளான இன்று நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல், நமது ஜனநாயக விழுமியங்களை அவமதிக்கும் செயலாகும்.

நமது ஜனநாயக கோவிலின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது. தாக்குதல் நடத்தியவர்கள் யார்? அவர்கள் எப்படி உள்ளே நுழைந்தார்கள்? அவர்களின் நோக்கங்கள் என்ன? என்பதைக் கண்டறிய அவசர விசாரணை மிகவும் அவசியம். நடவடிக்கை விரைவாகவும் கடுமையாகவும் இருக்க வேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்.


Next Story