பெற்றோரை கொன்று 2 நாட்களாக உடல்களை வீட்டில் வைத்திருந்த மகன்


பெற்றோரை கொன்று 2 நாட்களாக உடல்களை வீட்டில் வைத்திருந்த மகன்
x

மராட்டியத்தில் பெற்றோரை கொன்று 2 நாட்களாக வீட்டில் வைத்து அருகே அமர்ந்திருந்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.



புனே,



மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் தீத்வாலா பகுதியில் பஞ்சவதி சவுக் என்ற இடத்தில் வசித்து வந்த தம்பதி அசோக் போஸ்லே (வயது 55) மற்றும் அவரது மனைவி விஜயா போஸ்லே (வயது 50). இவர்களது மகன் அன்மோல் போஸ்லே (வயது 37). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரியும் உள்ளார்.

இந்நிலையில், போஸ்லே தம்பதியின் மகளுக்கு, அன்மோல் போன் செய்து வீட்டுக்கு வரும்படி கூறியுள்ளார். அவர் வீட்டுக்கு சென்று பார்த்ததில், பெற்றோர் இருவரும் கொல்லப்பட்டு கிடந்துள்ளனர்.

அவர்களது உடல்களின் அருகே அன்மோல் அமர்ந்து இருந்துள்ளார். வீடு முழுவதும் ரத்த வாடை வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அன்மோலின் சகோதரி, தீத்வாலா காவல் நிலையத்தில் உள்ள போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மூத்த காவல் அதிகாரி ஒருவர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். உடல்களை மீட்டு ருக்மணிபாய் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை நடத்தினர்.

இதில், தம்பதியின் கழுத்தில் அன்மோல் குத்தி கொலை செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது. ஆனால், பெற்றோரை அன்மோல் கொலை செய்ததற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.

இதனையடுத்து அன்மோலை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story