நாளை முதல் நடக்க இருந்த நிலையில் அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்


நாளை முதல் நடக்க இருந்த நிலையில் அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்
x

அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதால் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வேலை நிறுத்தம் நடக்க இருந்த நிலையில், கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பெங்களூரு:

நாளை வேலை நிறுத்தம்

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசு ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது. அதுபோல், அரசு போக்குவரத்து கழக ஊழியர்களும் சம்பள உயர்வு கேட்டு வருகிற 21-ந் தேதி (அதாவது நாளை) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து, போக்குவரத்து ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வை அரசு அறிவித்தது. ஆனால் 25 சதவீத ஊதிய உயர்வு வழங்காவிட்டால் நாளை (செவ்வாய்க்கிழமை) திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து சங்கங்கள் அறிவித்தன. வருகிற 22-ந் தேதி யுகாதி பண்டிகை இருப்பதால், போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் அரசு பஸ்கள் ஓடுமா?, ஓடாதா? என்ற கேள்வி ஏற்பட்டது.

போராட்டம் வாபஸ்

இந்த நிலையில், அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்களுடன் நேற்று முன்தினம் இரவு, கர்நாடக அரசு போக்குவரத்து கழக இயக்குனர் அன்புக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை வெற்றி அடைந்தது. அதாவது 15 சதவீத சம்பள உயர்வை போக்குவரத்து ஊழியர்கள் ஏற்றுக் கொண்டனர்.

மேலும் இந்த சம்பள உயர்வு 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இயக்குனர் அன்புக்குமார் கூறியதை ஏற்றுக் கொண்டு நாளை நடைபெற இருந்த வேலை நிறுத்த போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் திரும்ப பெற்றிருப்பதாக சங்கத்தின் தலைவர் அனந்த சுப்பிரமணியராவ் தெரிவித்துள்ளார்.

24-ந்தேதி போராட்டம்

அரசு போக்குவரத்து கழகத்தில் 2 சங்கங்கள் உள்ளன. அதில், ஒரு சங்கத்தின் தலைவரான அனந்த சுப்பிரமணியராவ் போராட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்திருந்தாலும், மற்றொரு சங்கம் 25 சதவீத சம்பள உயர்வு வேண்டும் என்று உறுதியாக உள்ளனர்.

இதையடுத்து, வருகிற 24-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக கர்நாடக மாநில சாலை போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் தலைவரான சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த சங்கத்தினரையும் சமாதானப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Related Tags :
Next Story