காவிரியில் உரிய நீரை திறக்க கோரும் தமிழக மனு 6-ந் தேதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கோரும் தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணை வருகிற 6-ந் தேதி நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில், காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறப்பது குறித்த உத்தரவுகளை முழுமையாக கர்நாடகம் அமல்படுத்துவதை உறுதிசெய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பிரசாந்த்குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆகஸ்டு 25-ந் தேதி விசாரித்தது.
காவிரியில் இருந்து உரிய நீரை தமிழ்நாட்டுக்கு திறந்தவிட பிறப்பித்த உத்தரவுகளை கர்நாடகம் அமல்படுத்தியிருப்பது குறித்து செப்டம்பர் 1-ந் தேதிக்குள் அறிக்கை அளிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 1-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.
இதற்கிடையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில் அதன் உறுப்பினர் வினீத் குப்தா தாக்கல் செய்துள்ள அறிக்கையில், காவிரியில் தமிழ்நாட்டுக்கு மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 281 கனஅடி நீர், அதாவது 13.328 டி.எம்.சி. நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆகஸ்டு 29-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை நாள்தோறும் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடுவதை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த மனு நேற்றைய வழக்குகளின் பட்டியலில் இடம்பெறவில்லை. அதையடுத்து, நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோருடன் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, இன்று விசாரணைக்கு வந்திருக்கவேண்டிய அந்த வழக்கு பட்டியலில் இடம்பெறாததால் வரவில்லை. எனவே தமிழ்நாடு அரசின் மனுவை செப்டம்பர் 7-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிட்டார்.
அதற்கு நீதிபதி பி.ஆர்.கவாய், செப்டம்பர் 7-ந் தேதி அரசியல் சாசன அமர்வு விசாரணையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்ததுடன், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தோமே, அதன் அறிக்கையை தாக்கல் செய்து விட்டதா என்றும் கேட்டார்.
அப்போது கர்நாடகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஷியாம் திவான், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டபடி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகம் நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்டு 29-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி அடுத்த 15 நாட்களுக்கு நாள்தோறும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிடவும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவும் நிறைவேற்றப்படும் என கர்நாடக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டு வாதிட்டார்.
அப்போது தமிழ்நாடு அரசு வக்கீல்களை நோக்கி, இந்த விவகாரம் தொடர்பாக அரசிடம் ஏதேனும் ஆலோசனை பெற்றுள்ளீர்களா என நீதிபதி பி.ஆர்.கவாய் கேட்டபோது, காவிரி நீர் கிடைக்காமல் குறுவை சாகுபடி கடுமையான வறட்சியை சந்தித்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசின் மனுவை திங்கட்கிழமை இல்லை என்றால் செவ்வாய்க்கிழமையாவது விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வக்கீல் முகுல் ரோத்தகி வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது குறுக்கிட்ட கர்நாடக வக்கீல் ஷியாம் திவான், ஆகஸ்டு 29-ந் தேதி தொடங்கி அடுத்த 15 நாட்களுக்கான நீரை திறந்துவிட ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசின் மனுவை செப்டம்பர் 11-ந் தேதி விசாரிக்கலாம் என யோசனை தெரிவித்தார். அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நீதிபதி பி.ஆர்.கவாய், காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கோரும் தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணை வருகிற 6-ந் தேதி நடைபெறும் என தெரிவித்தார்.