இளம்பெண்ணை கொன்று துண்டு துண்டாக வெட்டி உடல் ஆற்றில் வீச்சு கடனை திருப்பிக்கேட்டதால் வாலிபர் வெறிச்செயல்


இளம்பெண்ணை கொன்று துண்டு துண்டாக வெட்டி உடல் ஆற்றில் வீச்சு கடனை திருப்பிக்கேட்டதால் வாலிபர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 5 May 2023 10:45 PM GMT (Updated: 5 May 2023 10:46 PM GMT)

கடனை திருப்பிக்கேட்ட இளம்பெண்ணை கடத்திச் சென்று கொன்றதோடு அவரின் உடலை துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பாலக்காடு,

கடனை திருப்பிக்கேட்ட இளம்பெண்ணை கடத்திச் சென்று கொன்றதோடு அவரின் உடலை துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பாலக்கடவு பகுதியை சேர்ந்தவர் சனல். இவருடைய மனைவி ஆதிரா (வயது 27). சனலின் நண்பர் அகில் (31). அகிலும், ஆதிராவும் அங்கமாலியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்தனர். அகிலுக்கு பொருளாதார நெருக்கடி வரும் போதெல்லாம் ஆதிரா பணம் மற்றும் நகை கொடுத்து உதவி வந்தார்.

இந்தநிலையில் ஆதிரா, தான் கொடுத்த பணத்தை அகிலிடம் திருப்பி கேட்டு உள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் முடிந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 29-ந் தேதி முதல் ஆதிராவை காணவில்லை. இதனால் அவரை ஆதிராவின் கணவர் மற்றும் உறவினர்கள் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இதுகுறித்து அங்கமாலி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆதிரா மாயமானதாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தார்கள்.

மேலும் ஆதிராவின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது ஆதிரா கடைசியாக அகிலுடன் பேசியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டனர். அப்போது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் 29-ந் தேதி ஆதிராவை, அகில் காரில் அழைத்து சென்றதாக தெரிவித்தார்கள்.

தொடர்ந்து போலீசார் அகிலை தேடி வந்த நிலையில் நேற்று காலை அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, ஆதிராவை நான் தான் கடத்திச் சென்று அதிரப்பள்ளி அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் வைத்து கழுத்தை நெரித்து கொன்றதாவும், அவரின் உடலை துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் வீசியதாகவும் தெரிவித்தார். மேலும் ஆதிரா தன்னிடம் கடனாக தந்த நகை மற்றும் பணத்தை திருப்பிக் கேட்டதால் அவரை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அதிரப்பள்ளி ஆற்றுக்கு சென்றனர். அங்கு ஆற்றின் கரையில் ஆதிராவின் கால் மற்றும் உடல் பாகங்கள் கிடந்தன. அதனை கைப்பற்றிய போலீசார் திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மற்ற பாகங்களை தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, அகிலை கைது செய்தனர்.

கடனாக கொடுத்த நகை-பணத்தை திருப்பிக்கேட்ட இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story