தகராறை தடுக்க சென்ற வாலிபர்மர்ம உறுப்பில் தாக்கி கொலை
சித்ரதுர்கா அருகே காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடியதால் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறை பார்த்து தடுக்க சென்றவர் மர்ம உறுப்பில் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
சிக்கமகளூரு-
காதல் ஜோடி ஓட்டம்
சித்ரதுர்கா மாவட்டம் ஜோடி சிக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சித்தேஷ். அதே கிராமத்தை சேர்ந்தவர் போரம்மா. இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இது இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்ததும், அவர்கள் கண்டித்தனர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலர்கள் வீட்டைவிட்டு ஓடி சென்றனர்.
இது இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. அவர்கள் காதலர்களை தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இது தொடர்பாக 2 குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மர்ம உறுப்பில் தாக்கி கொலை
இந்த தகராறு குறித்து தகவல் அறிந்ததும், அதே கிராமத்தை சேர்ந்த பொம்மலிங்கையா (வயது 33) என்பவர் தடுப்பதற்கு முன் வந்தார். அப்போது கிராம மக்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் மர்ம உறுப்பில் தாக்கியுள்ளனர். இதில் பொம்மலிங்கையாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு சென்ற சித்ரதுர்கா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
10 பேர் வழக்கு பதிவு
பின்னர் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த தகவலை வைத்து 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் இந்த கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.