நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் 10 சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைகிறது
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னும், தேர்தல் நேரத்திலும் 10 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைகிறது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதிவரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடக்கிறது. அதில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்ட மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க வேண்டிய நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே இந்த ஆண்டு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நடக்கிறது. அதனுடன் சேர்த்து, நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
அத்துடன், நாடாளுமன்ற தேர்தல் நடக்க வேண்டிய நேரத்தில் 4 மாநிலங்களின் சட்டசபைகளும், அதன்பிறகு ஜார்கண்ட் மாநில சட்டசபையும் பதவிக்காலத்தை நிறைவு செய்கின்றன.
எனவே, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னும், தேர்தல் சமயத்திலும் 10 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைகிறது.
சட்டசபை வாரியாக முடிவடையும் காலம்
ஒவ்வொரு மாநில சட்டசபையின் பதவிக்காலம் முடிவடையும் காலம் வருமாறு:-
1.மிசோரம்-வருகிற டிசம்பர் மாதம். 2.சத்தீஷ்கார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா-2024-ம் ஆண்டு ஜனவரி மாதம். 3.ஆந்திரா, அருணாசலபிரதேசம், ஒடிசா, சிக்கிம்-ஜூன், 2024. 4.அரியானா, மராட்டியம்-நவம்பர், 2024. 5.டெல்லி-பிப்ரவரி, 2025. 6.பீகார்-நவம்பர், 2025.
7.அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம்-மே, 2026. 8.புதுச்சேரி-ஜூன், 2026. 9. கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட்-மார்ச், 2027. 10.உத்தரபிரதேசம்-மே, 2027.
11.குஜராத், இமாசலபிரதேசம்-டிசம்பர், 2027. 12.மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா-மார்ச், 2028. 13.கர்நாடகா-மே, 2028.
காஷ்மீர் சட்டசபை 2018-ம் ஆண்டு கலைக்கப்பட்டது. அங்கு தேர்தல் நடத்தப்பட்ட பிறகுதான் புதிய சட்டசபை அமையும்.