'என்கவுண்ட்டர் நடத்த நேரம் வந்துவிட்டது'- மந்திரி அஸ்வத் நாராயண்
‘என்கவுண்ட்டர் நடத்த நேரம் வந்துவிட்டது’ என்று மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- தட்சிண கன்னடா மாவட்டத்தில் பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்டுள்ளார். இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு முடிவுக்கட்ட எந்த வாய்ப்பும் வழங்காமல் கருணையின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் என்கவுண்ட்டருக்கு தயாராக இருக்கிறோம். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.
பிரச்சினையை தூண்டி விடுபவர்கள் எங்களின் பொறுமையை சோதிக்கிறார்கள். அதனால் எங்கள் முதல்-மந்திரி தெளிவான உத்தரவை அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார். வரும் நாட்களில் குற்றம் புரிபவர்கள் இத்தகைய சம்பவங்களை நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். என்கவுண்ட்டர் நடத்த நேரம் வந்துவிட்டது. அப்பாவி மக்களை காப்போம். பிரவீன் நெட்டார் குடும்பம் அனுபவிக்கும் வேதனையை வேறு யாரும் அனுபவிக்க கூடாது.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.