டி.கே.சிவக்குமாரை வீழ்த்த நினைக்கும் தந்திரம் பலிக்காது
டி.கே.சிவக்குமாரை வீழ்த்த நினைக்கும் பிரதமர் மோடி, அமித்ஷாவின் தந்திரம் பலிக்காது என்று டி.கே.சுரேஷ் கூறியுள்ளார்.
பெங்களூரு:-
கர்நாடக சட்டசபை தேர்தலில் ராமநகர் மாவட்டத்தில் உள்ள கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆளும் பா.ஜனதா சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு பா.ஜனதா சார்பில் நந்தினி கவுடா போட்டியிட்டு இருந்தார். அப்போது டி.கே.சிவக்குமார் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 552 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட நந்தினி கவுடா 6 ஆயிரத்து 273 வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தார். ஆனால் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிட்டு இருந்த நாராயணகவுடா 47 ஆயிரத்து 643 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது கனகபுரா தொகுதியில் டி.கே.சிவக்குமாரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநில வருவாய் துறை மந்திரியுமான ஆர்.அசோக் களம் நிறுத்தப்பட்டு உள்ளார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருபெரும் தலைவர்கள் நேரடியாக மோதிக் கொள்வதால் கனகபுரா தொகுதியில் இப்போதே தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் நேற்று பெங்களூரு பத்மநாபநகரில் டி.கே.சிவக்குமாரின் தம்பியும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.சுரேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டி.கே.சிவக்குமாரை வீழ்த்த நினைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவின் தந்திரம் பலிக்காது. அவர் தேவேகவுடா உள்ளிட்ட பெருந்தலைவர்களிடம் இருந்து அரசியல் கற்றவர். அவருக்கு இதுபோன்ற தந்திரங்களை எதிர்கொள்வது புதிய விஷயம் அல்ல. அதுபோல் எனக்கும் அரசியல் புதிதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.