அரசு நிலத்திற்கு பட்டா வழங்க கோரி கிராம மக்கள் போராட்டம்
கலசா அருகே அரசு நிலத்திற்கு பட்டா வழங்க கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
சிக்கமகளூரு-
சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகா சம்சே கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடங்கள் உள்ளது. இந்த இடங்களில் வீடு கட்டுவதற்கு நிலம் ஒதுக்கவேண்டும் என்று அந்த பகுதி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வனப்பகுதியில் உள்ள நிலத்தில் இடம் வழங்கியது. இதையடுத்து அந்த நிலத்தில் வீடு கட்டுவதற்கு கிராம மக்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் திடீரென்று அரசு அதிகாரிகள் குறுக்கிட்டு, வீடு கட்ட கூடாது என்று முட்டுகட்டை போட்டுள்ளனர். அதாவது பட்டா இல்லாத இடத்தில் வீடு கட்ட முடியாது என்று நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் அரசு வழங்கிய நிலத்திற்கு பட்டா வழங்கவேண்டும். மேலும் அந்த நிலத்தில் இலவச வீடுகள் கட்டி தரவேண்டும் என்று கூறினர். அதற்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.