தொடர் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை பிடிபட்டது


தொடர் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை பிடிபட்டது
x
பிடிபட்ட காட்டு யானையை படத்தில் காணலாம்.

குடகு மாவட்டம் சித்தாபுராவில் தொடர் அட்டகாசம் செய்து வந்த காட்டுயானையை கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.

குடகு:

காட்டு யானைகள் அட்டகாசம்

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகாவில் சித்தாபுரா மற்றும் கரடிகோடு, மால்தாரே, பானங்களா, ஹொசூரு, இன்ஜகாலா கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி இரைதேடி ஊருக்குள் புகுந்து தொடர் அட்டகாசம் செய்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட்டமாக கிராமத்திற்குள் புகுந்த யானைகள் காபி செடி மற்றும் ெநற்பயிர்களை நாசப்படுத்திவிட்டு சென்றன. இதில் ஏராளமான விளை பயிர்கள் நாசமானது. இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காட்டுயானைகளை பிடிக்கும்படி வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற வனத்துறை அதிகாரிகள் தொடர் அட்டகாசம் செய்து வந்த 5 யானைகளை அடையாளம் கண்டு அதை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கும்கி யானைகள் வரவழைப்பு

இதற்காக துபாரே மற்றும் மத்திகெரேவில் உள்ள யானைகள் முகாமில் இருந்த அபிமன்யூ, அர்ஜூனா, பதேஷ், அஜயா, தனஞ்ஜெயா ஆகிய 5 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. மேலும் 50-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள், கால்நடை டாக்டர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி கடந்த வாரம் மடிகேரி தாலுகா கேலாவாரா வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒரு காட்டு யானையை வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் மற்றொரு காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும்போது செத்தது. இதையடுத்து மீதமுள்ள 3 யானைகளை கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பிடிபட்டது

இந்நிலையில் நேற்று முன்தினம் சித்தாபுரா வனப்பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் அடையாளம் காணப்பட்ட யானைகளில் ஒன்று சுற்றித் திரிவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற வனத்துைறயினர் கும்கி யானைகள் உதவியுடன் அந்த யானையை சுற்றி வளைத்தனர்.

பின்னர் கால்நடைத்துறை டாக்டர்கள் ஆலோசனையின் பேரில் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சித்தனர். அப்போது அந்த யானை வனத்துறை ஊழியர்களுக்கு பிடி கொடுக்காமல் தப்பியோடியது. சுமார் 2 கி.மீ தூரம் சென்றதும் மயங்கி விழுந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் யானையை கும்கியானைகள் உதவியுடன் லாரியின் ஏற்ற முயற்சித்தனர். அப்போது அந்த யானை அடம் பிடித்தது. பின்னர் கும்கியானைகளை வைத்து அசுவாசப்படுத்தி, அதை லாரியில் வனத்துறையினர் ஏற்றினர். இதற்கு பொக்லைன் எந்திரமும் பயன்படுத்தப்பட்டது. பின்னர் அந்த யானைக்கு ரேடியோ காலர் பொறுத்தி பந்திப்பூர் வனப்பகுதியில் விட்டனர்.


Next Story