ஜி-20 உச்சி மாநாட்டு மண்டபத்தில் நிறுவப்பட்ட உலகின் மிக பெரிய நடராஜர் சிலை


ஜி-20 உச்சி மாநாட்டு மண்டபத்தில் நிறுவப்பட்ட உலகின் மிக பெரிய நடராஜர் சிலை
x

டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ள பாரத் மண்டபத்தின் முன் உலகின் மிக பெரிய நடராஜர் சிலை நிறுவப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் வருகிற 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்திய விமான படையை சேர்ந்த போர் விமானங்கள் உள்பட வான்வழியேயான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த உச்சி மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதுதவிரவும், பிற நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்க இருக்கின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ள பாரத் மண்டபத்தின் முன் உலகின் மிக பெரிய நடராஜர் சிலை நிறுவப்பட்டு உள்ளது.

9-ம் நூற்றாண்டில் இருந்து, சோழர் காலத்தில் பின்பற்றப்பட்ட நடராஜர் சிலை உருவாக்கத்திற்கான சிற்ப சாஸ்திரத்தில் குறிப்பிட்டபடி வழிகாட்டுதல்கள் மற்றும் அளவீடுகளை மேற்கொண்டு, தமிழகத்தின் சுவாமிமலையை சேர்ந்த பாரம்பரிய சிற்பிகள் இந்த சிலையை உருவாக்கி உள்ளனர்.

இதற்காக எட்டு தனிமங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. காப்பர் (87 சதவீதம்), துத்தநாகம் (10 சதவீதம்), காரீயம் (3 சதவீதம்), டின், வெள்ளி, தங்கம், பாதரசம் ஆகியவை குறைந்த அளவிலும் மற்றும் இரும்பும் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

7 மாதங்களில் சிலை உருவாகி உள்ளது. தாண்டவ நடனத்தில் சிவன் இருப்பது போன்ற இந்த சிலை 27 அடி உயரமும், 20 டன் எடையும் கொண்டது. டெல்லியில் பிரகதி மைதான் பகுதியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ள பாரத் மண்டபத்தின் முன் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது.


Next Story