8,615 வாக்குச்சாவடிகள் உள்ளன பெங்களூருவில் 95.13 லட்சம் வாக்காளர்கள்


8,615 வாக்குச்சாவடிகள் உள்ளன பெங்களூருவில் 95.13 லட்சம் வாக்காளர்கள்
x

மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி

பெங்களூரு:-

பெங்களூருவில் 95.13 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறியுள்ளார்.

பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வாக்குச்சாவடிகள்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெங்களூரு மாநகராட்சியை பொறுத்தவரையில் 28 தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 95 லட்சத்து 13 ஆயிரத்து 830 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 49 லட்சத்து 26 ஆயிரத்து 270 பேரும், பெண் வாக்காளர்கள் 45 லட்சத்து 85 ஆயிரத்து 824 பேரும், சேவை வாக்காளர்கள் 1,763 பேரும் உள்ளனர்.

ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 494 இளம் வாக்காளர்களும், 24 ஆயிரத்து 754 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 80 வயதை கடந்த வாக்காளர்கள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 719 பேரும் உள்ளனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் 2 ஆயிரத்து 101 பேரும், 1,736 திருநங்கை வாக்காளர்களும் உள்ளனர். பெங்களூருவில் மொத்தம் 8 ஆயிரத்து 615 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பதற்றமானவை

இதில் 2,217 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும். பெங்களூருவில் இதுவரை ரூ.2 கோடியே 76 லட்சத்து 67 ஆயிரத்து 291 மதிப்புள்ள ரொக்கம் மற்றும் இதர பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளை மேற்கொள்ள தொகுதி வாரியாக அதிகாரிகளை நியமனம் செய்துள்ளோம். தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

இவ்வாறு துஷார் கிரிநாத் கூறினார்.


Next Story