பஜ்ரங் தள அமைப்பை தடை செய்யும் திட்டம் எதுவும் இல்லை; பல்டி அடித்த காங்கிரஸ்
பஜ்ரங் தள அமைப்பை தடை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
உடுப்பி,
கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தள அமைப்பை தடை செய்வோம் என தெரிவித்தது சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு எதிராக அந்த அமைப்பு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியான வீரப்ப மொய்லி உடுப்பி நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு, பஜ்ரங் தள அமைப்பை தடை செய்யும் திட்டம் எதுவும் கட்சியிடம் இல்லை. மாநில அரசுகளுக்கு அதுபோன்ற அமைப்புகளை தடை செய்யும் உரிமை இல்லை.
காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. பஜ்ரங் தள அமைப்பை தடை செய்வோம் என கூறவில்லை என்று விளக்கம் அளித்து உள்ளார்.
தொடர்ந்து அவர், சர்தார் வல்லபாய் பட்டேல் மீது இன்று மதிப்பு, அன்பு செலுத்துகிறோம் என கூறி வரும் பா.ஜ.க., ஒரு கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ், அமைப்பை பட்டேல் தடை செய்த நிகழ்வை மறந்து விட்டது. அந்த முடிவை பின்னர் ஜவகர்லால் நேரு திரும்ப பெற்றார் என நினைவுப்படுத்தி உள்ளார்.
வெறுப்பு அரசியலுக்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டின் நிலைப்பாடு மிக தெளிவாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக, எங்களுடைய தேர்தல் அறிக்கையில் அதனை நாங்கள் தெரிவித்து இருக்கிறோம்.
ஆனால், பஜ்ரங் தள அமைப்பை தடை செய்யும் நோக்கம் எதுவும் எங்களுக்கு இல்லை. கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் கூட இதனை இன்று தெளிவுப்படுத்தி விட்டார் என கூறியுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு ஒரு சில தினங்களே உள்ள நிலையில், வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பணியாற்றி வருகின்றன.
கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் நட்சத்திர பிரசாரகர்களும் கலந்து கொண்டு மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பிரசாரம், பேரணி, கட்சி பொது கூட்டம் போன்றவற்றிலும் கட்சிகள் கலந்து கொண்டு வருகின்றன.
கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில், பஜ்ரங் தளம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகியவற்றை தடை செய்வோம் என தெரிவித்து இருந்தது.
அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்ட அந்த அறிக்கையில், சட்டம் மற்றும் அரசியல் சாசனம் புனிதம் வாய்ந்தது என நாங்கள் நம்புகிறோம். அதனை தனி நபர்கள் அல்லது பஜ்ரங் தளம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் பிற அமைப்புகள், பெரும்பான்மையினர் அல்லது சிறுபான்மையினர் இடையே பகைமையையோ அல்லது வெறுப்புணர்வையோ ஊக்குவித்து மீறுதல் கூடாது.
சாதி மற்றும் மத ரீதியாக சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்வை பரப்ப கூடிய தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது காங்கிரஸ் கட்சியானது உறுதியான மற்றும் தீர்க்கம் வாய்ந்த முடிவை எடுக்கும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
அதுபோன்ற எந்தவொரு அமைப்பின் மீதும் சட்டத்தின்படி, தடை விதிப்பது உள்ளிட்ட முடிவுகளை நாங்கள் எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளது.
இதுபற்றி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவரான சுரேந்திரா ஜெயின் கூறும்போது, பஜ்ரங் தள அமைப்பை, தேச விரோத மற்றும் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் காங்கிரஸ் கட்சி ஒப்பிட்டிருப்பது துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது.
நாட்டு மக்கள் இதனை ஏற்கமாட்டார்கள். இந்த சவாலை பஜ்ரங்தளம் ஏற்கிறது. அனைத்து ஜனநாயக வழிகளிலும் இதற்கு நாங்கள் பதிலளிப்போம் என்று கூறினார். இந்த நிலையில், தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் நேற்று ஒன்று திரண்டனர்.
கட்சி அலுவலகத்திற்கு முன்பு தடுப்பான்களை அமைத்து பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். எனினும், அவர்களை தள்ளி விட்டு, விட்டு உள்ளே நுழைய முயற்சித்தனர்.
இதனால், பஜ்ரங் தள அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொண்டர்களில் சிலர் கொடியை பிடித்தபடி, கோஷங்களையும் எழுப்பினர். இதன்பின் அவர்களை தடுத்து, கைது செய்த போலீசார், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.