இந்து மதம் குறித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடம் இல்லை; சதீஸ் ஜார்கிகோளி மீண்டும் உறுதி
இந்து மதம் குறித்து தான் கூறிய கருத்துக்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று சதீஸ் ஜார்கிகோளி மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பெங்களூரு:
என்ன சம்பந்தம்?
கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ., கடந்த 7-ந் தேதி பெலகாவி மாவட்டம் நிப்பானியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, "இந்து என்ற சொல் பார்சியன் மொழியை சேர்ந்தது. அதன் அர்த்தம் மோசமான, அருவெறுக்கத்தக்க, ஆபாச முறையில் இருக்கிறது. இந்து என்ற சொல்லுக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்? உள்ளது. இந்த கருத்து என்னுடைய சொந்த கருத்து அல்ல. இது புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது. அதுபற்றி விவாதம் நடைபெற வேண்டும்" என்றார்.
சதீஸ் ஜார்கிகோளியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கண்டனம் தெரிவித்தார். அந்த கருத்தை நிரகரிப்பதாகவும் கூறினார். சட்டசபை எதிா்க்கட்சி தலைவர் சித்தராமையா, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கருத்தே தனது கருத்து என்று கூறினார். மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சதீஸ் ஜார்கிகோளியின் கருத்து அவரது சொந்த கருத்து என்றும், அதற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
விவாதம் நடைபெறவில்லை
பா.ஜனதா கட்சியினர் சதீஸ் ஜார்கிகோளியின் கருத்தை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்து மதத்தை இழிவாக பேசியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில், இந்து மதம் குறித்து தான் கூறிய கருத்துக்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று சதீஸ் ஜார்கிகோளி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்து என்றால் அடிமைகள் என்று அர்த்தம். விக்கிபீடியா, கோரா ஆகிய ஆன்லைன் பக்கங்களில் இதுபற்றிய தகவல் இடம் பெற்றுள்ளது. மேலும் எழுத்தாளர் ஜி.எஸ்.பட்டீல் என்பவர் பசவ பாரத என்ற பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ளார். அந்த கட்டுரையில் இந்து குறித்து அவர் சில தகவல்களை குறிப்பிட்டுள்ளார். நான் கூறிய கருத்துகள் குறித்து சரியான முறையில் விவாதம் நடைபெறவில்லை.
உண்மையான பெயர்
நான் இந்து மதத்தை சேர்ந்தவரா? என்று கேட்கிறீர்கள். நான் இந்தியன். இந்து பெயரின் உண்மையான பெயர் குறித்து சரியான முறையில் விவாதம் நடைபெற வேண்டும். வேறு விஷயங்கள் குறித்து தான் விவாதம் நடக்கிறது. நான் கூறிய கருத்துகள் தவறு என்று நிரூபித்தால் மன்னிப்பு கேட்பதோடு எனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன்.
இந்து பெயரின் உண்மை நிலை குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்க கோரி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியுள்ளேன். எனது கருத்துகள் தவறானவையா? என்பதை நிரூபிக்குமாறும் அதில் கேட்டுள்ளேன். எனது கருத்தின் எதார்த்தம் குறித்து எங்கள் கட்சி மேலிட தலைவர்களிடம் எடுத்து கூறுவேன். நான் கூறிய கருத்துக்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடம் இல்லை.
இவ்வாறு சதீஸ் ஜார்கிகோளி கூறினார்.