சித்தராமையா கூறிய கருத்துக்கு வீடியோ ஆதாரம் உள்ளது


சித்தராமையா கூறிய கருத்துக்கு வீடியோ ஆதாரம் உள்ளது
x

லிங்காயத் முதல்-மந்திரி தொடர்பாக சித்தராமையா கூறிய கருத்துக்கு வீடியோ ஆதாரம் உள்ளது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். பா.ஜனதாவுக்கு ஆதரவான சூழல் நிலவுகிறது. சாதி, மதம் அடிப்படையில் தேர்தல் நடக்காது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை மக்கள் விரும்புகிறார்கள்.

அதன் அடிப்படையில் வளர்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த முறை மக்கள் அவ்வாறான விஷயங்களை மனதில் வைத்து தேர்தலில் வாக்களிக்க தயாராகிவிட்டனர்.

லிங்காயத் முதல்-மந்திரிகள் பற்றி சித்தராமையா கூறிய கருத்துகள் திரிக்கப்படவில்லை. அவர் பேசியதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. இந்த விவகாரம் பெரிதாக எழுந்ததும் சித்தராமையா தனது கருத்ைத மாற்றிக்கொண்டுள்ளார். மக்கள் அறிவாளிகள். முட்டாள்கள் இல்லை என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும். பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காத அதிருப்தியில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அவர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ்பெறுவார்கள். மாடால் விருபாக்ஷப்பாவை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது பிரச்சினை ஏற்கனவே தீர்வுகாணப்பட்டுவிட்டது.

வரும் நாட்களில் தேர்தல் பிரசாரத்திற்காக உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியும் கர்நாடகம் வருகை தரஉள்ளனர். ராகுல்காந்தி எங்கு வேண்டுமானாலும் பிரசாரம் செய்யட்டும். அவர் ஹாவேரி மாவட்டத்திற்கும் பிரசாரத்திற்கு வரட்டும். அவரது பிரசார சாதனை பற்றி எங்களுக்கு தெரியும். தேர்தல் பிரசாரத்திற்காக யார் வேண்டுமானாலும் வரலாம். ஹாவேரி மாவட்டத்திற்கு ராகுல்காந்தி வருவதை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story