கர்நாடக அரசியலில் வருகிற 18-ந்தேதிக்கு பிறகு பெரிய மாற்றம் இருக்கும்; ஜனதாதளம்(எஸ்) மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் கணிப்பு


கர்நாடக அரசியலில் வருகிற 18-ந்தேதிக்கு பிறகு பெரிய மாற்றம் இருக்கும்; ஜனதாதளம்(எஸ்) மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் கணிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2022 6:45 PM GMT (Updated: 4 Dec 2022 6:45 PM GMT)

கர்நாடக அரசியலில் வருகிற 18-ந்தேதிக்கு பிறகு பெரிய மாற்றம் இருக்கும் என ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

உப்பள்ளி:

பஞ்சரத்னா யாத்திரை

ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் உப்பள்ளிக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் பஞ்சரத்னா யாத்திரை நடந்து வருகிறது. இதில் குமாரசாமி கலந்துகொண்டு ஒவ்வொரு கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இந்த யாத்திரைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இது மாற்றத்திற்கான அறிகுறி ஆகும். அடுத்த மாதம் கித்தூர் கர்நாடகா, கல்யாண கர்நாடக பகுதியில் பஞ்சரத்னா யாத்திரை நடக்க உள்ளது. இதுதொடர்பா அந்தப்பகுதியை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்.

பெரிய மாற்றம்

கர்நாடக அரசியலில் வருகிற 18-ந்தேதிக்கு பிறகு பெரிய அளவில் மாற்றம் ஏற்படும். ஆளும் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் மற்றும் இன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இணைய உள்ளனர். சில மாவட்டங்கள் காங்கிரஸ், பா.ஜனதா இல்லாத மாவட்டங்களாக மாறும். பா.ஜனதா முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியுடன் குமாரசாமி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஜார்கிகோளி குடும்பத்தில் சிலர் எங்கள் கட்சியில் சேர்ந்துள்ளனர்.

கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் கொண்டு வந்ததன் பின்னணியில் வாக்கு வங்கி அரசியல் உள்ளது. இந்த சட்டத்துக்கு பிறகு மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருவதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பசுவை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் மனிதர்களை அழிக்க வேண்டாம்.

குமாரசாமி முதல்-மந்திரி

கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு எதிரான அலை உள்ளது. இதனால் சட்டசபை தேர்தலில் அக்கட்சி 60 இடங்களில் கூட வெற்றி பெறாது. கர்நாடக சட்டசபை தேர்தலில் குமாரசாமி தலைமையில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதி. ஜனதாதளம்(எஸ்) ஆட்சி அமைந்தால் தலித் அல்லது முஸ்லிம் ஒருவர் முதல்-மந்திரியாக இருக்க வேண்டும் என்பது குமாரசாமியின் விருப்பம். ஆனால், ஜனதாதளம்(எஸ்) கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் குமாரசாமி தான் முதல்-மந்திரியாக இருப்பார். துணை முதல்-மந்திரி பதவி வேண்டுமானால் தலித் அல்லது முஸ்லிமுக்கு ஒதுக்கப்படும்.

முஸ்லிம் மாணவ-மாணவிகளுக்கு தனி கல்லூரி வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story