பா.ஜனதா வேட்பாளர் பட்டியலில் ஆச்சரியமான பெயர்கள் இடம் பெறும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
பா.ஜனதா வேட்பாளர் பட்டியலில் ஆச்சரியமான பெயர்கள் இடம் பெறும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முழு மெஜாரிட்டி
சட்டசபை தேர்தலையொட்டி வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். சில தொகுதிகளில் நாங்கள் புதிய முறையில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். இது நடைபெறும். பட்டியலில் சில தொகுதிகளுக்கு ஆச்சரியமான பெயர்கள் இடம் பெறும். வரும் நாட்களில் நீங்கள் இதை பார்க்க போகிறீர்கள்.
எங்கள் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த நம்பிக்கையில் உள்ளனர். பா.ஜனதாவுக்கு முழு மெஜாரிட்டி கிடைக்கும். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். மாவட்ட அளவிலான கூட்டங்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று (நேற்று) மாநில ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டம் நாளையும் (இன்று) நடக்கிறது.
வேட்பாளர் பட்டியல்
கட்சி மேலிடத்தின் ஒப்புதலுக்காக பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை 6-ந் தேதி அனுப்புவோம். 8-ந் தேதி வேட்பாளர் பட்டியல் குறித்து மேலிடம் இறுதி முடிவு எடுக்கும். அதன் பிறகு அந்த பட்டியல் வெளியாகும். பா.ஜனதா முழு மெஜாரிட்டி பெறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிகின்றன. நாங்கள் 150 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
ஜனநாயக அடிப்படையில் நாங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறோம். உள்ளூர், மாவட்ட, மாநில அளவில் கருத்துகள் சேகரிக்கப்பட்டு வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள். இந்த பணி எந்த சிக்கலும் இன்றி நடைபெறும். சில எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள் கட்சியை விட்டு விலகியுள்ளனர். அதனால் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
வாய்ப்பு கிடைக்காது
எங்கள் கட்சியில் 125 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கட்சியில் உள்ள நிர்வாகிகள் சிலர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கருதும் சிலர் கட்சியை விட்டு விலகுகிறார்கள். அவ்வாறு 2, 3 பேர் விலகியுள்ளனர். முதல்-மந்திரி ஆக சித்தராமையா, டி.கே.சிவக்குமார் கனவு காண்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் வெற்றி பெறாது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.