நெருக்கடியில் இருந்து மீள பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி உதவக்கூடும்: ரா முன்னாள் தலைவர்
பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் இருந்து மீள இந்தியா உதவும் என நான் தனிப்பட்ட முறையில் கருதுவதாக ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அமர்ஜித் சிங் தெரிவித்தார்
புதுடெல்லி
இலங்கையை போலவே பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. சர்வதேச நாணய நிதியமும் பாகிஸ்தானுக்கு நிதி உதவிகளை அளிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. வரலாறு காணாத நெருக்கடியால் தவிக்க்கும் பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் இருந்து மீள இந்தியா உதவும் என நான் தனிப்பட்ட முறையில் கருதுவதாக ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அமர்ஜித் சிங் தெரிவித்தார். இது தொடர்பாக அமர்ஜித் சிங் கூறியதாவது:- பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த கிடைக்கும் அனைத்து நேரமும் சிறந்த நேரம் தான். நமது அண்டை நாட்டுடன் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்த வேண்டும். இன்னும் சில மாதங்களில், இந்தாண்டு இறுதியில் பிரமதர் மோடி பாகிஸ்தானுக்கு உதவுவார் என்பதே எனது கணிப்பு.அங்கிருந்து எனக்கு வந்த உளவுத் தகவல் இல்லை. இது எனது தனிப்பட்ட கணிப்பு. பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை நடத்தும் விவகாரத்தில் உள்நாட்டு அரசியல் எப்போதும் ஆதிக்கம் செலுத்துகிறது" என்றார்.