தன் மீதான விசாரணை அறிக்கையை கேட்டுசுப்ரீம் கோர்ட்டுக்கு உத்தரவிட்ட கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதிநீதித்துறை வட்டாரங்களில் அதிர்ச்சி


தன் மீதான விசாரணை அறிக்கையை கேட்டுசுப்ரீம் கோர்ட்டுக்கு உத்தரவிட்ட கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதிநீதித்துறை வட்டாரங்களில் அதிர்ச்சி
x
தினத்தந்தி 28 April 2023 11:00 PM GMT (Updated: 29 April 2023 1:01 AM GMT)

தன் மீதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டுக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டிருப்பது நீதித்துறை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட்டு, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

அதன்படி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த வழக்கை கொல்கத்தா ஐகோர்ட்டில் அபிஜித் கங்கோபாத்யாய் அமர்வு தொடர்ந்து விசாரணை நடத்தி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். இது மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

இதைத்தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

பின்னர் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் வழங்கிய பேட்டி தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு கொல்கத்தா ஐகோர்ட்டு பதிவாளருக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி பதிவாளரும் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு, மேற்கு வங்காள பள்ளி ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கை வேறொரு நீதிபதி அமர்வுக்கு மாற்றுமாறு கொல்கத்தா ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதிக்கு நேற்று உத்தரவிட்டது.

நிலுவையில் இருக்கும் வழக்கு தொடர்பாக நீதிபதிகள் செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்தும் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், நேற்று சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

அதாவது தனது பேட்டி தொடர்பாக தலைமை நீதிபதி அமர்வு முன்பு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை, தனது பேட்டியின் அதிகாரபூர்வ மொழிபெயர்ப்பு மற்றும் கொல்கத்தா ஐகோர்ட்டு பதிவாளரின் பிரமாண பத்திரம் ஆகியவற்றின் அசல் வடிவங்களை தனக்கு முன் இன்று (நேற்று) நள்ளிரவு 12 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு செயலாளருக்கு அவர் உத்தரவிட்டார்.

இதற்காக கொல்கத்தா ஐகோர்ட்டில் தனது அறையில் இரவு 12.15 மணி வரை காத்திருப்பேன் என்று கூறியிருந்த அவர், வெளிப்படைத்தன்மைக்காக இந்த நடவடிக்கை அவசியம் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய நீதித்துறை வரலாற்றில் அரிய நிகழ்வாக, சுப்ரீம் கோர்ட்டுக்கு ஐகோர்ட்டு நீதிபதி ஒருவர் உத்தரவிட்ட சம்பவம் நீதித்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story