சிக்கமகளூரு மாவட்டத்தில் மும்முனை போட்டி
கர்நாடகத்தின் மலைநாடு மாவட்டம் என்றழைக்கப்படும் சிக்கமகளூரு மாவட்டத்தில் சிக்கமகளூரு, மூடிகெரே, கடூர், தரிகெரே, சிருங்கேரி என 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த தேர்தலில் 4 தொகுதிகளில் பா.ஜனதாவும், ஒரு தொகுதியில் காங்கிரசும் வெற்றி பெற்றிருந்தது.
சிக்கமகளூரு மாவட்டத்தை பொறுத்தவரை காங்கிரஸ், பா.ஜனதா, ஜனாதளம்(எஸ்) ஆகிய 3 கட்சிகளும் சமபலத்துடன் திகழ்கிறது. இதனால் எப்போதும் இந்த மாவட்டத்தில் மும்முனை போட்டியே நிலவி வருகிறது. இந்த முறை சிக்கமகளூரு மாவட்டத்தை முழுமையாக கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. பா.ஜனதாவுக்கு போட்டியாக, காங்கிரசும், ஜனதாதளம்(எஸ்) கட்சியும் மல்லுக்கட்டி வருகின்றன.
சிக்கமகளூரு
சிக்கமகளூரு தொகுதியில் தற்போது பா.ஜனதாவின் சி.டி.ரவி எம்.எல்.ஏ.வாக உள்ளார். மக்கள் செல்வாக்கு அதிகம் இருக்கும் சி.டி.ரவியே மீண்டும் அங்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் சார்பில் சமீபத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த தம்மய்யா, ஹரீஷ், ரேகா உளியப்பா கவுடா ஆகிய 3 பேரும் டிக்கெட் கேட்டு வருகிறார்கள். அவர்களில் தம்மய்யா, சி.டி.ரவியுடன் நெருக்கமாக இருந்தவர் என்பதால், அவருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் திம்மாஷெடம்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடூர்-சிருங்கேரி
கடூர் தொகுதியில் தற்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கே.எஸ்.பிரகாஷ். அவருக்கே மீண்டும் பா.ஜனதா வாய்ப்பு வழங்கி உள்ளது. காங்கிரஸ் சார்பில், சமீபத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த ஒய்.எஸ்.வி. தத்தாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கே.எஸ்.ஆனந்த் என்பவருக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது. ஜனதாதளம்(எஸ்) சார்பில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. காங்கிரசில் டிக்கெட் கிடைக்காததால், மீண்டும் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு வந்துள்ள ஒய்.எஸ்.வி.தத்தாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
சிருங்கேரி தொகுதியில் காங்கிரசின் ராஜேகவுடா எம்.எல்.ஏ.வாக உள்ளார். அவருக்கே மீண்டும் காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது. பா.ஜனதா சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜீவராஜிக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. ஜனதாதளம்(எஸ்) கட்சி சுதாகர் ஷெட்டி என்பவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.
தரிகெரே-மூடிகெரே
தரிகெரே தொகுதியில் தற்போது பா.ஜனதா எம்.எல்.ஏ. வாக இருப்பவர் சுரேஷ். அவருக்கே அக்கட்சி மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது. காங்கிரஸ் சார்பில் கோபி கிருஷ்ணா, சீனிவாஸ், பரமேஸ் ஆகிய 3 பேரும் டிக்கெட் கேட்டு கட்சி மேலிடத்தை வலியுறுத்தி வருகிறார்கள். ஜனதாதளம்(எஸ்) பலமான வேட்பாளரை தேடி வருகிறது.
மூடிகெரே ெதாகுதியில் தற்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எம்.பி.குமாரசாமி. ஆனால் இந்த முறை அவருக்கு பா.ஜனதா டிக்கெட் வழங்கவில்லை. அவருக்கு பதிலாக தீபக் தொட்டய்யா என்பவருக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கி உள்ளது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. மோட்டம்மாவின் மகள் நயனா மோட்டம்மா, சீனிவாஸ் ஆகியோர் டிக்கெட் கேட்டு வருகிறார்கள். நயனாவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என தெரிகிறது. ஜனதாதளம்(எஸ்) சார்பில் நிங்கய்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மும்முனை போட்டி நிலவும் சிக்கமகளூரு மாவட்டத்தில் வெற்றி பெற போவது யார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த தேர்தலில் வெற்றி-தோல்வி நிலவரம்
தொகுதி வெற்றி தோல்வி
சிக்கமகளூரு சி.டி.ரவி(பா.ஜ.க.) 70,863 சங்கர்(காங்.) 44,549
கடூர் கே.எஸ்.பிரகாஷ்(பா.ஜ.க.) 62,232 ஒய்.எஸ்.வி.தத்தா(ஜ.தளம்-எஸ்) 46,866
சிருங்கேரி ராஜேகவுடா(காங்.) 62,780 ஜீவராஜ்(பா.ஜ.க.) 60,791
தரிகெரே சுரேஷ்(பா.ஜ.க.) 44,940 சீனிவாஸ்(சுயே.) 33,253
மூடிகெரே எம்.பி.குமாரசாமி(பா.ஜ.க.) 58,783 மோட்டம்மா(காங்.) 46,271