பிருந்தாவன் பூங்காவில் சுற்றித்திரிந்த 5 வயது ஆண் சிறுத்தை கூண்டில் சிக்கியது


பிருந்தாவன் பூங்காவில் சுற்றித்திரிந்த 5 வயது ஆண் சிறுத்தை கூண்டில் சிக்கியது
x

பிருந்தாவன் பூங்காவில் சுற்றித்திரிந்த 5 வயது ஆண் சிறுத்தை கூண்டில் சிக்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மண்டியா:

பிருந்தாவன் பூங்காவில் சுற்றித்திரிந்த 5 வயது ஆண் சிறுத்தை கூண்டில் சிக்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

பிருந்தாவன் பூங்காவில் சிறுத்தை

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த அணை அருகே பிருந்தாவன் பூங்கா உள்ளது. சுற்றுலா தலமான இங்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிருந்தாவன் பூங்காவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது.

அதாவது, கே.ஆர்.எஸ். அணையின் நீர்தேக்க பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை, பிருந்தாவன் பூங்காவில் சுற்றி வந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் பீதி அடைந்தனர். அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

ரூ.75 லட்சம் வருவாய் இழப்பு

இதனால் அந்த சிறுத்தையை பிடிக்க பிருந்தாவன் பூங்காவில் 8 இடங்களில் இரும்பு கூண்டுகள் வைத்தனர். ேமலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் சிறுத்தையின் நடமாட்டமத்தை கண்காணித்தனர். ஆனால் அந்த சிறுத்தை, கூண்டில் சிக்கவில்லை. அதனை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வந்தனர். மேலும், சிறுத்தை நடமாட்டம் இருந்ததால் பிருந்தாவன் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வர கடந்த நவம்பர் மாதம் 6-ந்தேதி முதல் ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து சிறுத்தையை வனத்துறையினர் தீவிரமாக தேடினர். ஆனால் அந்த சிறுத்தை சிக்கவில்லை. இதனால் அந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றிருக்கலாம் என பிருந்தாவன் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது. ஆனாலும், சிறுத்தை பீதியால் பிருந்தாவன் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது. இதன்காரணமாக கடந்த 2 மாதங்களில் ரூ.75 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அங்கு வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

கூண்டில் சிக்கியது

இந்த நிலையில் 2 மாதங்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை, நேற்று இரும்பு கூண்டில் சிக்கி உள்ளது. பிருந்தாவன் பூங்காவின் தெற்கு வாசல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கூண்டில் அந்த சிறுத்தை சிக்கி உள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் பிருந்தாவன் பூங்காவுக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பின்னர் வனத்துறையினர் அந்த சிறுத்தையை கூண்டுடன் லாரியில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பிருந்தாவன் பூங்காவில் கடந்த 2 மாதங்களாக சுற்றித்திரிந்த சிறுத்தை கூண்டில் சிக்கி உள்ளது. இது 5 வயது நிரம்பிய ஆண் சிறுத்தை ஆகும். அந்த சிறுத்தை, நாகரஒலே வனப்பகுதியில் கொண்டு விடப்படும் என்றார்.

சுற்றுலா பயணிகள் நிம்மதி

பிருந்தாவன் பூங்காவில் கடந்த 2 மாதங்களாக சுற்றித்திரிந்த சிறுத்தை பிடிபட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் அந்தப்பகுதி மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story