சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் டெல்லி சிறப்பு கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் ஆஜர்


சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில்  டெல்லி சிறப்பு கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் ஆஜர்
x

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் டெல்லி சிறப்பு கோர்ட்டில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாா் நேற்று நேரில் ஆஜரானார். வழக்கு விசாரணை வருகிற 30-ந் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் டெல்லி சிறப்பு கோர்ட்டில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாா் நேற்று நேரில் ஆஜரானார். வழக்கு விசாரணை வருகிற 30-ந் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

டி.கே.சிவக்குமார் மீது வழக்கு

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். இவர், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரத்துறை மந்திரியாக இருந்தபோது, அவரது வீடு, அலவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது டெல்லியில் டி.கே.சிவக்குமாரின் நெருங்கிய ஆதரவாளர் வீட்டில் இருந்து ரூ.8½ கோடி கணக்கில் வராத பணம் சிக்கி இருந்தது. இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறைக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ரூ.8½ கோடி சிக்கிய விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, டி.கே.சிவக்குமார், அவரது ஆதரவாளர்கள் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

விசாரணைக்கு ஆஜராக சம்மன்

அந்த வழக்கில் டி.கே.சிவக்குமாருக்கு டெல்லி அமலாக்கத்துறை சிறப்பு கோர்ட்டு ஜாமீன் வழங்கி இருந்தது. இதையடுத்து, அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக டெல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்கள். அந்த குற்றப்பத்திரிகையில் ஹவாலா முறைகேட்டில் டி.கே.சிவக்குமார் ஈடுபட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டு இருந்தது.

டெல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ஜூலை 1-ந் தேதி (அதாவது நேற்று) நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

டெல்லி கோர்ட்டில் ஆஜர்

அதன்படி, டி.கே.சிவக்குமார் மீதான சட்டவிரோத பணபரிமாற்றம் தொடா்பான வழக்கு டெல்லி சிறப்பு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.கே.சிவக்குமார் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார். அதே நேரத்தில் டி.கே.சிவக்குமார் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் தனது மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, கோர்ட்டில் இருந்து டி.கே.சிவக்குமார் வெளியே வந்தார்.


Next Story