பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கசிக்கமகளூருவில் 16 இடங்களில் சோதனை சாவடிகள்
பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க சிக்கமகளூருவில் 16 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் தெரிவித்தார்.
சிக்கமகளூரு-
பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க சிக்கமகளூருவில் 16 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் தெரிவித்தார்.
சட்டசபை தேர்தல்
கர்நாடகத்தில் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் வழங்குவது அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க கர்நாடக மாநிலம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் சிக்கமகளூரு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு உமாபிரசாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், மதுபானம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கவும், அவற்றை கடத்துவதை தடுக்கவும் சிக்கமகளூருவில் 16 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லும் நகை, பணம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. 2 லிட்டருக்கு மேல் மதுபானம் மற்றும் ரூ.2 லட்சத்திற்கு மேற்பட்ட ரொக்கத்தை எடுத்து செல்வதற்கு அனுமதி கிடையாது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுபானங்கள் பறிமுதல்
தேர்தல் நடக்கும் சமயங்களில் பிரச்சினை, கலவரங்கள் ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூடிகெரே ஆட்டோ ஓட்டுனர்கள் இடையே ஏற்பட்ட தகராறு குறித்து விளக்கம் கேட்டுள்ளேன். இரு தரப்பினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தவும் ஏற்பாடும் செய்துள்ளேன்.
அதேபோல வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் ஒரு கார் விபத்துக்குள்ளானதும், அதில் மதுபானங்களும், காலண்டர்களும் இருந்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக காரை ஓட்டி வந்த மஞ்சுநாத் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் சிக்கமகளூரு எம்.ஜி. ரோட்டில் 5 வயது சிறுவனை மர்மநபர் தூக்கிச் சென்றார். உடனடியாக அவன் சுதாரித்துக் கொண்டு தப்பி ஓடினான். 5 வயது சிறுவனை கடத்த முயன்ற நபரை பிடிப்பதற்கு டவுன் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.