தடையில்லா சான்றிதழ் வழங்க விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் உதவியாளர் கைது
தடையில்லா சான்றிதழ் வழங்க விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் உதவியாளரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு;
மங்களூருவை சேர்ந்த விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்க முடிவு செய்தார். இதற்காக அவர் மங்களூருவில் உள்ள தாலுகா அலுவலகத்தில் என்.ஒ.சி. (தடையில்லா சான்றிதழ்) விண்ணப்பித்து இருந்தார். ஆனால் பல நாட்கள் ஆகியும் அவருக்கு என்.ஒ.சி. கிடைக்கவில்லை என தெரிகிறது.
இதையடுத்து அந்த விவசாயி, தாலுகா அலுவலகத்திற்கு சென்று தாசில்தார் உதவியாளர் சிவானந்த நடேகர் என்பவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் என்.ஓ.சி. கொடுக்கவேண்டும் என்றால் ரூ.4,700 லஞ்சம் தரவேண்டும் என கூறியுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், லோக் அயுக்தாவிடம் புகார் அளித்தார். இதையடுத்து லோக் அயுக்தா அதிகாரிகளின் அறிவுரையின்பேரில் விவசாயி, ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை சிவானந்தாவிடம் கொடுத்தார்.
அதனை சிவானந்தா வாங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த லோக் அயுக்தா போலீசார் சிவானந்தாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.