டூர் ஆப் டூட்டி; இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணி; ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் ;பணி ஓய்வு பலன்: ரூ. 12 லட்சம்


டூர் ஆப் டூட்டி; இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணி; ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் ;பணி ஓய்வு பலன்: ரூ. 12 லட்சம்
x

இந்திய ராணுவத்தில் இது ஒரு புதுவிதமான முயற்சி. இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். அதன் முடிவில் அவர்களுக்கு ரூ.10 லட்சம் (வரிப்பிடித்தம் இல்லாமல்) வழங்கப்படும்.

புதுடெல்லி:

ராணுவத்தில் புதிதாக சேர விரும்புவோருக்கான மிக முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் அறிவிக்கவுள்ளது. இந்த புதுவிதமான ராணுவ பணி நியமன முறையை டூர் ஆஃப் தி டூட்டி என்று அழைக்கிறார்கள். இத்திட்டத்திற்கு அக்னிபத் என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் வீரர்கள் அக்னிவீரர்கள் என்றழைக்கப்படுவார்கள்.

இந்திய ராணுவத்தில் இது ஒரு புதுவிதமான முயற்சி. இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். அதன் முடிவில் அவர்களுக்கு ரூ.10 லட்சம் (வரிப்பிடித்தம் இல்லாமல்) வழங்கப்படும். அத்துடன் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இந்தப் பணிநியமன திட்டம் மூலம் 45,000 முதல் 50,000 வீரர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளாது. அதிகாரி ரேங்குக்கு கீழ் உள்ள பதவியில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள். 6 மாத இடைவெளியில் முப்படைகளுக்குமான வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

4 ஆண்டுகள் பணிக்குப் பின்னர் இவர்களில் 25 சதவீதம் பேர் மட்டும் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள். ஆனால் மீண்டும் பணி என்பதை இதுவரை இன்னும் உறுதிபடுத்தவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை மூலம் நியமிக்கப்படும் வீரர்கள் 6 மாதம் பயிற்சி பெறுவார்கள். 3.5 ஆண்டுகள் பணி புரிவார்கள்.

தற்போது இந்திய ராணுவத்தில் 17 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை வேலை செய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில், குறைந்த சேவை என்பதன் மூலம் வீரர்களை நியமிப்பதால் அரசுக்கு செலவினங்கள் குறையும் எனக் கூறப்படுகிறது.

* பணிக்கான வயது வரம்பு: 17 ½ – 21 வயது வரை

* பணிக்காலம்: 4 ஆண்டுகள்

* காலிப் பணியிடங்கள்: 45,000 முதல் 50,000 (ஆண்டுதோறும்)

* பயிற்சி காலம்: 6 மாதங்கள்

* சம்பளம்: ரூ. 30,000-ரூ. 40,000

* பணி ஓய்வு பலன்: ரூ. 10-12 லட்சம் (வரிச்சலுகையுடன்)

டூர் ஆப் டூட்டி திட்டம் மூலம் நியமிக்கப்படும் பணியாளருக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டாலும். இதில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அரசாங்கமும் அதற்கு சமமான தொகையை செலுத்தி அதை சேவா நிதி திட்டத்தின் கீழ் சேமித்து வைக்கும். ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான தொகை 4 ஆண்டுகள் பணி முடியும் போது வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் பணியாற்றும் அனுபவத்தை பெற விரும்பும் இந்திய இளைஞர்கள் குறுகிய காலம் ராணுவத்தில் பணியாற்றலாம். அவர்கள் விருப்பம்போல் தற்காலிகமாக ராணுவத்தில் சேவை செய்துவிட்டு இயல்புக்கு திரும்பலாம்.

டூர் ஆப் டூட்டி திட்டத்தை ராணுவத்தில் உள்ள வீரர்கள் பற்றாக்குறையை சரி செய்ய கொண்டுவந்துள்ளதாக அரசுத் தரப்பு கூறுகிறது. மேலும் இதன் மூலம் நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையும் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.


Next Story