மைசூரு அரண்மனையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு 5 நாட்கள் தடை


மைசூரு அரண்மனையை பார்வையிட  சுற்றுலா பயணிகளுக்கு 5 நாட்கள் தடை
x
தினத்தந்தி 6 Oct 2023 6:45 PM GMT (Updated: 6 Oct 2023 6:45 PM GMT)

தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மைசூரு

மைசூரு தசரா விழா வருகிற 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி அரண்மனையில் பல்வேறு நிகழ்வுகள், பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.

இதனால் அரண்மனையை சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு 5 நாட்கள் தடை விதிக்க மைசூரு அரண்மனை வாரியம் முடிவு செய்துள்ளது. அதாவது மன்னர் யதுவீர் அமர்ந்து தர்பார் நடத்த நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் வருகிற 9-ந்தேதி ஜோடிக்கப்பட உள்ளது.

இதனால் அன்றைய தினம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மைசூரு அரண்மனையை சுற்றுலா பயணிகள் பார்வையிட தடை விதிக்கப்படுகிறது. அதுபோல் தசரா விழா தொடக்க நாளான வருகிற 15-ந்தேதி அரண்மனையில் மன்னர் தர்பார் நடத்துவார்.

இதனால் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையும், ஆயுத பூஜை நடைபெறும் 23-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையும், தசரா ஊர்வலம் நடைபெறும் 24-ந்தேதி காலை 10 மணி முதல் இரவு வரையும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது.

அதுபோல் சிம்மாசனத்தை பிரித்து கருவூலத்திற்கு அனுப்பும் பணி அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந்தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடக்கிறது. அப்போதும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக என மைசூரு அரண்மனை வாரியம் அறிவித்துள்ளது.


Next Story