செல்ல பிராணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம்; வைரலான வீடியோ

அரியானாவில் செல்ல பிராணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
குருகிராம்,
அரியானாவில் குருகிராம் நகரில் பாலம் விகார் விரிவாக்க பகுதியில் அமைந்த ஜிலே சிங் காலனியில் அண்டை வீடுகளில் வசித்து வருபவர்கள் மணிதா மற்றும் சவிதா. மணிதா செல்ல பிராணியாக ஷெரு என்ற பெயரிடப்பட்ட ஆண் நாயை 8 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்.
இவரது வீட்டுக்கு அருகே வசிப்பவர் சவிதா என்ற ராணி. இவர் செல்ல பிராணியாக ஸ்வீட்டி என்ற பெயரிடப்பட்ட பெண் நாயை வளர்த்து வருகிறார். இவர்கள் இருவரும் தங்களது செல்ல பிராணிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இதன்படி, 100 பேருக்கு அழைப்பு விடுத்து உள்ளனர். திருமண பத்திரிகைகளுக்கான 25 அட்டைகளை அச்சிட்டு உள்ளனர். மற்றவர்களை ஆன்லைன் வழியே அழைத்து உள்ளனர்.
இதுபற்றி சவிதா கூறும்போது, நான் செல்ல பிராணிகள் வளர்ப்பதில் பிரியம் உள்ளவள். எனது கணவரும், நானும் செல்ல பிராணிகளை பராமரித்து வருகிறோம். எனக்கு குழந்தை இல்லை. அதனால், ஸ்வீட்டியை நாங்கள் குழந்தையாக வளர்த்து வருகிறோம்.
ஸ்வீட்டிக்கு திருமணம் செய்து வைக்கலாமே என பலரும் கூறுவார்கள். அதுபற்றி நாங்களும் யோசித்தோம் என கூறுகிறார். இந்த திருமணத்தின்போது பாரம்பரிய முறைப்படி நாய்களுக்கு மாலை அணிவித்து, சடங்குகள் நடத்தப்பட்டன.
கொட்டு மேளங்களும் முழங்கின. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நடனம் ஆடியும் மகிழ்ந்தனர். அந்த இடமே கோலாகலமுடன் காணப்பட்டது. இந்த திருமணம் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.