கர்நாடகத்தில் மத்திய நிலை போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
கர்நாடகத்தில் மத்திய நிலை போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
மத்திய நிலை அதிகாரிகள்
கர்நாடகத்தில் சிறப்பாக பணியாற்றிய 18 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த பதக்கம் வழங்கும் விழா பெங்களூருவில் உள்ள கவா்னர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்துகொண்டார். இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு பேசியதாவது:-
போலீஸ் துறையில் அடிமட்டத்தில் பணியாற்றும் காவலர்களுக்கும், ஐ.பி.எஸ். அதிகரிகளுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கிறது. ஆனால் மத்திய நிலையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு அந்த பயிற்சி கிடைப்பது இல்லை. அவர்களுக்கும் நல்ல பயிற்சி வழங்கினால் அது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். அதனால் அவர்களுக்காக தனியாக பயிற்சி மையம் உருவாக்கப்படும்.
சட்டம்-ஒழுங்கு
அதற்காக பாடத்திட்டம் தேவைப்படுகிறது. இது அந்த அதிகாரிகள் இன்னும் சிறப்பாக பணியாற்ற உதவி செய்யும். சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது மற்றும் குற்றங்களை தடுப்பதில் போலீசாருக்கு அதிக பொறுப்பு உள்ளது. சமீபகாலமாக தொழில்நுட்பம் சார்ந்த குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அவற்றுக்கான ஆதாரங்கள் கிடைப்பது இல்லை.
அதனால் போலீசார் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை மேலும் பலப்படுத்த வேண்டியது அவசியம். இதற்கான தேவையான நிதி வருகிற பட்ஜெட்டில் ஒதுக்கப்படும். கர்நாடகத்தில் உப்பள்ளி, பல்லாரியில் புதிதாக தலா 2 தடய அறிவியல் ஆய்வு மையங்கள் அமைக்கப்படும். போலீஸ் துறை மற்றும் தடய அறிவியல் மையங்கள் நவீனமாக்கப்பட்டு வருகின்றன. குற்றங்களை கண்டறிவதில் இந்த தடய அறிவியல் மையங்கள் முக்கிய பங்காற்றுவதால், அவற்றை மேம்படுத்த வேண்டியது அவசியம். அதே நேரத்தில் குற்றங்களில் ஈடுபட்டவர்களை விரைவாக கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
மிக முக்கியமானது
போலீஸ் துறையில் நடைபெறும் தவறுகளை தடுக்க வேண்டும். அதாவது போலீஸ் துறை நியமனங்களில் தவறுகள் நடைபெறாத வண்ணம் தடுப்பது குறித்து போலீஸ் டி.ஜி.பி. சிந்திக்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போலீஸ் பணி மிக முக்கியமானது. போலீசார் தங்களின் சொந்த வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டி உள்ளது. மேலும் போலீசார் போலீசார் பல்வேறு அழுத்தங்களுடன் பணியாற்றுகிறார்கள்.
கர்நாடக போலீசார் திறமையாக பணியாற்றுகிறார்கள். நாட்டிலேயே கர்நாடக போலீஸ் முதல் இடத்தில் உள்ளது. போலீசாருக்கு சட்ட விதிகள் தந்தையை போலவும், கடமை தாயை போலவும் உள்ளது. போலீசார் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். இதற்காக பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். கர்நாடகத்தை சேர்ந்த பல்வேறு போலீஸ் அதிகாரிகள் ஜனாதிபதி பதக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது பெருமை அளிப்பதாக உள்ளது. இது அவர்களின் பணிக்கு கிடைத்த அங்கீகாரம். பதக்கம் பெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
இதில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, கூடுதல் தலைமை செயலாளர் (போலீஸ்) ரஜனீஸ் கோயல், டி.ஜி.பி. பிரவீண் சூட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.