10 ஐகோர்ட்டு நீதிபதிகள் இடமாற்றம் பரிசீலனையில் உள்ளது மத்திய சட்ட மந்திரி தகவல்
10 ஐகோர்ட்டு நீதிபதிகள் இடமாற்றம், பரிசீலனையில் இருப்பதாக மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு கூறினார்.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியத்துக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. நீதிபதிகள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாக மத்திய அரசை சுப்ரீம் கோர்ட்டு குற்றம் சாட்டி வருகிறது. நாடாளுமன்றம்தான் உயர்ந்த அதிகாரம் படைத்தது என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு கூறி வருகிறார்.
சமீபத்தில், ஒரு வழக்கு விசாரணையின்போது, ஐகோர்ட்டு நீதிபதிகள் இடமாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதிப்பதாக மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு குற்றம் சாட்டியது. ''இது தீவிரமான பிரச்சினை'' என்றும் கூறியது.
சட்ட மந்திரி பதில்
இந்தநிலையில், நேற்று மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு கூறியதாவது:- ஐகோர்ட்டு நீதிபதிகள் இடமாற்றத்துக்கென நடைமுறை விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. சுப்ரீம் கோர்ட்டின் 4 மூத்த நீதிபதிகளுடன் ஆலோசித்து, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி இதுதொடர்பான நடவடிக்கையை தொடங்குவார்.
மாற்றப்பட வேண்டிய நீதிபதி பணியாற்றும் ஐகோர்ட்டுடனும், புதிதாக பணியில் சேர வேண்டிய ஐகோர்ட்டுடனும் அவர் ஆலோசனை நடத்துவார். இந்த நடைமுறைப்படி இடமாற்றம் செய்யப்படுகிறது.
10 நீதிபதிகள்
தற்போதைய நிலையில், 10 ஐகோர்ட்டு நீதிபதிகளை இடமாற்றம் செய்யும் நடைமுறை, பரிசீலனை கட்டத்தின் பல்வேறு நிலைகளில் இருக்கிறது.
ஒரு ஐகோர்ட்டில் இருந்து மற்றொரு ஐகோர்ட்டுக்கு நீதிபதிகளை மாற்றுவதற்கான நடைமுறை விதிகளில் இதற்கென காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.