12 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து கொடுப்பதற்கு சோதனை முயற்சி - மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி


12 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து கொடுப்பதற்கு சோதனை முயற்சி -  மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி
x

12 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து கொடுப்பதற்கு சோதனை முயற்சி நடந்து வருவதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.

மத்திய மந்திரி ஆலோசனை

மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன்பவார் நேற்று புதுச்சேரி வந்தார். அவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் புதுவை சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவார் நிருபர்களிடம் கூறியதாவது:-

இறப்பு விகிதம் குறைவு

புதுவை சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் இறப்பு விகிதமும் குறைவாக உள்ளது. மத்திய அரசின் உயிர் காக்கும் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் ரூ.70 கோடியும், கொரோனா காலகட்டத்தில் ரூ.20 கோடியும் வழங்கப்பட்டது.

சோதனை முயற்சி

புதிய வகை கொரோனா தொற்றினை எதிர்கொள்ள மத்திய அரசு தயார் நிலையில் உள்ளது. இந்தியாவில் 220 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து கொடுப்பதற்கு சோதனை முயற்சி நடந்து வருகிறது.

இதுவரை 4 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story