திரிணாமுல் பெண் எம்.பி. மீது பா.ஜனதா எம்.பி. புதிய புகார் - விசாரணை நடத்த மத்திய மந்திரிக்கு கடிதம்


திரிணாமுல் பெண் எம்.பி. மீது பா.ஜனதா எம்.பி. புதிய புகார் - விசாரணை நடத்த மத்திய மந்திரிக்கு கடிதம்
x

திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. மீது பா.ஜனதா எம்.பி. புதிய குற்றச்சாட்டு கூறியுள்ளார். மக்களவை கணக்கின் ‘லாக்-இன்’ விவரங்களை பயன்படுத்த தொழிலதிபரை அனுமதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மேற்கு வங்காள மாநிலம் கிருஷ்ணாநகர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. மகுவா மொய்த்ரா. இவர் மக்களவையில் கேள்விகள் கேட்க தர்ஷன் ஹிராநந்தனி என்ற தொழிலதிபரிடம் ரொக்கப்பணமும், பரிசுகளும் லஞ்சமாக பெற்றதாக சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே நேற்று முன்தினம் கடிதம் எழுதி இருந்தார். இதுதொடர்பான மறுக்க முடியாத ஆதாரங்களை வக்கீல் ஜெய்ஆனந்த் டெஹத்ராய் என்பவர் தன்னிடம் அளித்ததாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், நிஷிகாந்த் துபே நேற்று புதிய புகார் ஒன்றை தெரிவித்தார். இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா, தனது மக்களவை கணக்குக்கான 'லாக்-இன்' விவரங்களை தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி மற்றும் ஹிராநந்தனி குழுமத்திடம் கொடுத்துள்ளார். தங்கள் ஆதாயத்துக்காக அவர்கள் அந்த கணக்கை பயன்படுத்த அவர் அனுமதித்துள்ளார்.

இது, அவர் மீதான குற்றச்சாட்டுகளிலேயே மிகவும் கடுமையானது. ரகசிய தகவல்கள் அடங்கிய அரசாங்க இணையதளத்தை வெளிநபர் பயன்படுத்த அனுமதிப்பது, தேச பாதுகாப்புக்கு எதிரானது. ஆகவே, அவர் இல்லாத இடத்திலும் அவரது 'லாக்-இன்' பயன்படுத்தப்பட்டு இருக்கிறதா என்பதை கண்டறிய அதன் ஐ.பி. முகவரிகளை ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுபோல், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர், ஹிராநந்தனி குழுமம் மீது குற்றம்சாட்டினார். ஹிராநந்தனி குழும தலைவர் தன்னை சந்தித்தபோது பயன்படுத்திய வார்த்தைகள், நாடாளுமன்ற கேள்விகளில் பயன்படுத்தும் வார்த்தைகள் போல் இருந்ததாக அவர் கூறினார். இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், அது மிகவும் அதிர்ச்சிகரமானது என்று தெரிவித்தார்.

ஆனால், குற்றச்சாட்டுகளை மகுவா மொய்த்ரா எம்.பி. மறுத்துள்ளார். எம்.பி.க்களின் அனைத்து நாடாளுமன்ற பணிகளையும் தனி உதவியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் குழுக்கள்தான் செய்வதாக அவர் கூறியுள்ளார். குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று ஹிராநந்தனி குழுமமும் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்களும் விளக்கம் அளித்தன. வக்கீல் ஜெய் ஆனந்த், பெண் எம்.பி.யின் முன்னாள் காதலர் என்றும், ஒரு செல்ல நாய்க்குட்டிக்கான சண்டையில், பெண் எம்.பி.யை அவர் பழிவாங்க முயன்று வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story