துப்குரி இடைத்தேர்தலில் திரிணாமுல் வெற்றி: எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி - மம்தா பானர்ஜி


துப்குரி இடைத்தேர்தலில் திரிணாமுல் வெற்றி: எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 8 Sep 2023 11:22 AM GMT (Updated: 8 Sep 2023 11:32 AM GMT)

மேற்கு வங்காளம் துப்குரி தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

புதுடெல்லி,

கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி, திரிபுராவில் 2 தொகுதிகள், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், 7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கேரளா புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன் அமோக வெற்றி பெற்றார். திரிபுராவில் 2 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் மேற்கு வங்காளம் துப்குரி தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜக வேட்பாளரை விட சுமார் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் வெற்றி பெற்றார். இதன் மூலம் துப்குரி சட்டமன்றத் தொகுதியை பாஜகவிடம் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

துப்குரி இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து, நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று மம்தா பானர்ஜி டுவீட் செய்துள்ளார். அந்தப் பதிவில் அவர், "துப்குரி சட்டமன்றத் தொகுதிக்கான முக்கியமான இடைத்தேர்தலில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து, எங்களுக்கு ஆதரவாக உறுதியாக வாக்களித்ததற்காக துப்குரி மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வடக்கு வங்காளத்தில் உள்ள மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். மேலும் எங்களது வளர்ச்சிக்கான உத்தி, உள்ளடக்கிய தன்மை மற்றும் அதிகாரமளித்தலை நம்புகிறார்கள். வங்காளம் தனது ஆணையை வெளிப்படுத்தியுள்ளது. விரைவில் இந்தியாவும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தும். ஜெய் வங்காளம்!! ஜெய் இந்தியா!" என்று தெரிவித்து உள்ளார்.


Next Story