நள்ளிரவில் வெறி பிடித்தவர் போல மாறி.. தனது மகள்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேரை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை!


நள்ளிரவில் வெறி பிடித்தவர் போல மாறி.. தனது மகள்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேரை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை!
x

தனது இரண்டு மகள்கள், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட ஐந்து பேரைக் கொன்ற நபருக்கு, கோர்ட்டு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அகர்தலா,

திரிபுராவின் வடக்கு ராம்சந்திரகாட் பகுதியில் வசித்து வந்த கூலித் தொழிலாளி டெப்ராய்(40 வயது) என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி நள்ளிரவு தனது இரு மகள்கள் அதிதி மற்றும் மந்திராவை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றார்.

அப்போது அவரது மூத்த சகோதரர் அம்லேஷ் டெப்ராய் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​​​அவரும் சம்பவ இடத்திலேயே குற்றவாளியால் கொல்லப்பட்டார். மூன்று குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற பிறகு, அந்த குற்றவாளி சாலையில் அந்த வழியாகச் சென்றவர்களைத் தாக்கத் தொடங்கினார்.

இதன் விளைவாக அவ்வழியாக ரிக்சாவில் பயணித்த இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களில் ஒருவரான கிருஷ்ண தாஸ், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதைத் தொடர்ந்து கோவாய் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சத்யஜித் மாலிக், போலீஸ் படையுடன் சம்பவ இடத்திற்கு வந்து அவரைக் காவலில் எடுக்க முயன்றார்.

அப்போது டெப்ராய் போலீஸ் மாலிக்கையும் தாக்கினார். அதில் போலீஸ் பலத்த காயமடைந்தார். அதன்பின்னர் அவர் அகர்தலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறுதியில் போலீசார் டெப்ராயயை கைது செய்தனர்.

இந்த கொடூர கொலை வழக்கை போலீசார் விரைவாக விசாரணை செய்து, கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இருப்பினும், சம்பவத்தன்று இரவு அந்த குற்றவாளி எதற்காக திடீரென வன்முறையில் ஈடுபட்டார் என்பதை அறிய முடியவில்லை.

இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் விகாஸ் தேப் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட பிரதீப் டெப்ராய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என முதலில் தெரிந்தது, ஆனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல என விசாரணைக்கு பின் மருத்துவர்கள் சான்றளித்தனர். இந்த வழக்கில் ஓராண்டுக்குள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனையடுத்து கடந்த ஆண்டு தனது இரண்டு மகள்கள், மூத்த சகோதரர், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு வழிப்போக்கர் உட்பட ஐந்து பேரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட அந்த நபருக்கு, கோர்ட்டு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.


Next Story