டுவிட்டர் தளத்தில் இருந்து சர்ச்சைக்குரிய 'காளி' போஸ்டர் நீக்கம்
டுவிட்டர் தளத்தில் இருந்து சர்ச்சைக்குரிய ‘காளி’ போஸ்டர் நீக்கப்பட்டது.
புதுடெல்லி,
பிரபல பெண் இயக்குனர் லீனா மணிமேகலை, 'காளி' என்ற ஆவணப்படத்தை இயக்கி உள்ளார். இது தொடர்பான போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.
கனடாவில் வெளியிடப்பட்ட இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் புயலை கிளப்பி உள்ளது. இது தொடர்பாக லீனா மணிமேகலை மீது டெல்லி, உத்தரபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
மேலும் கனடாவிலும் இது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்த படம் தொடர்பான அனைத்து ஆத்திரமூட்டும் விஷயங்களையும் அகற்றுமாறு அந்த நாட்டு அதிகாரிகளுக்கு ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருக்கிறது. இந்த நிலையில் டுவிட்டரில் வெளியான சர்ச்சைக்குரிய காளி போஸ்டர் நீக்கப்பட்டு விட்டது. பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் குவிந்ததையடுத்து டுவிட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.