திருவிழா பார்த்து விட்டு திரும்பிய அக்கா - தங்கை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்
திருவிழாவை பார்த்து விட்டு திரும்பிய அக்காள் - தங்கையை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 8 பேர் கும்பலில் 6 பேர் பிடிபட்டனர்.
பாதேப்பூர்:
உத்தரபிரதேச மாநிலம் உசேன்கஞ்ச் மாவட்டம் பாதேப்பூர் கிராமத்தை சேர்ந்த 15 மற்றும் 16 வயதுடைய சகோதரிகள் பக்கத்தில் சென்பூர் என்ற இடத்தில் நடந்த திருவிழாவை பார்க்க சென்றனர்.
திருவிழாவை பார்த்து விட்டு இரவு அவர்கள் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களை 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று பின் தொடர்ந்து வந்தது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்த போது அந்த கும்பல் திடீரென அக்காள்-தங்கையை மிரட்டி கடத்தி சென்றனர். மறைவான இடத்துக்கு 2 பேரையும் தூக்கி சென்ற அந்த கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது.
ஒருவர் பின் ஒருவராக அவர்கள் சகோதரிகளை கற்பழித்தனர். காம கொடூர கும்பலிடம் சிக்கி தவித்த 2 பேரும் எங்களை விட்டு விடுங்கள், என கதறினார்கள். ஆனாலும் அந்த கும்பல் அவர்களை விடவில்லை. இதனால் உதவி கேட்டு சகோதரிகள் சத்தம் போட்டனர்.
இதை கேட்ட பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். கிராம மக்களை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்ப முயன்றது. ஆனாலும் பொதுமக்கள் அவர்களில் 6 பேரை மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து 6 பேரையும் கைது செய்தனர். கைதான 6 பேரும் 22 வயதில் இருந்து 26 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். தலைமறைவான அவர்களது நண்பர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் அக்காள் - தங்கை இருவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் நடத்திய விசாரணையில் பாலியல் வழக்கில் சிக்கிய கும்பல் சம்பவம் நடப்பதற்கு முன்பு திருவிழா பார்க்க சென்ற சகோதரிகளிடம் அத்து மீறியதும், அவர்களிடம் இருந்து செல்போனை பறித்ததும் தெரியவந்தது. அதன் பிறகு தான் அவர்கள் பின் தொடர்ந்து சென்று இந்த காமவேட்டையை அரங்கேற்றி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 வயது சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டார். அடுத்தடுத்து நடந்து வரும் இந்த சம்பவங்கள் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.