வீடு வீடாக தடுப்பூசி போடும் 2 மாத கால பணி தொடங்கியது


வீடு வீடாக தடுப்பூசி போடும் 2 மாத கால பணி தொடங்கியது
x

விடுபட்டவர்களை கண்டறிந்து வீடு வீடாக தடுப்பூசி போடும் 2 மாத கால பணி தொடங்கியது.

புதுடெல்லி,

வீடு வீடாக சென்று தடுப்பூசி போடாமல் விடுபட்டவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் 2 மாத கால பணி தொடங்கியது. முதியோர் இல்லங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீது தனி கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 2 மாத கால தீவிர பிரசாரத்தை மத்திய அரசு நடத்தியது. அதுபோல், 2-வது கட்டமாக, மீண்டும் 2 மாத கால தீவிர பிரசாரம் நேற்று நாடு முழுவதும் தொடங்கியது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அடுத்த 2 மாதங்களும் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடாமல் விடுபட்டவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த வேண்டும். இதன் முக்கிய நோக்கம், 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துதல், தடுப்பூசி போடுவதில் பின்தங்கியுள்ள 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் ஆகும்.

இதற்காக முதியோர் இல்லங்கள், பள்ளி, கல்லூரிகள், பள்ளி செல்லாத குழந்தைகள், சிறைகள், செங்கல் சூளைகள் ஆகியவை மீது தனி கவனம் செலுத்தி, விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இதை போர்க்கால வேகத்தில் செயல்படுத்த வேண்டும். முதல் தவணை, 2-வது தவணை, பூஸ்டர் தடுப்பூசி என அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அதுபோல், 18 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுவதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story