போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற 2 பேர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு


போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற 2 பேர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
x

மங்களூரு அருகே, ரவுடி கொலை வழக்கில் கைதான நிலையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற 2 பேரை பனம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

மங்களூரு: மங்களூரு அருகே, ரவுடி கொலை வழக்கில் கைதான நிலையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற 2 பேரை பனம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

ரவுடி

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பனம்பூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் ராஜா என்ற ராகவேந்திரா(வயது 28). இவர் பிரபல ரவுடி ஆவார். போலீசாரின் ரவுடிகள் பட்டியலில் இவருடைய பெயரும் இடம்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் ராகவேந்திரா பனம்பூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 2 மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.

இதுதொடர்பாக பனம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. அதன்பேரில் தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.

தப்பி ஓட்டம்

தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ராகவேந்திரா கொலை வழக்கில், மூட்செட் பகுதியைச் சேர்ந்த அர்ஜூன் மற்றும் மனோஜ் என்கிற பிந்தாஸ் மனோஜ் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்களும் ரவுடிகள் ஆவார்கள். இதையடுத்து நேற்று முன்தினம் அர்ஜூன் மற்றும் மனோஜை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் முல்கி அருகே குளோபல் ஹெல்த் ஹெரிடேஜ் பகுதியில் பதுங்கி இருந்த சிலரை பிடிக்க நேற்று அதிகாலையில் தனிப்படை போலீசார் சென்றனர்.

இந்த சந்தர்ப்பத்தில் அங்கு பதுங்கி இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதே நேரத்தில் போலீசாரின் பிடியில் இருந்த அர்ஜூன், மனோஜ் ஆகியோரும் சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரா, போலீஸ் ஏட்டு சுதீர் பூஜாரி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் ஆகியோரை தாக்கிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

துப்பாக்கிச்சூடு

இதையடுத்து அவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் பிரசாத் எச்சரிக்கை விடுத்தார். தப்பி ஓட முயற்சிக்க வேண்டாம் என்றும், சரண் அடைந்து விடும்படியும் கூறினார். ஆனால் அதை மனோஜும், அர்ஜூனும் கேட்கவில்லை. மாறாக அவர்கள் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் மகேஷ் பிரசாத், தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டு மீண்டும் அவர்களை எச்சரித்தார். ஆனால் அவர்கள் கேட்காமல் தொடர்ந்து ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் மகேஷ் பிரசாத், தனது துப்பாக்கியால் அவர்கள் 2 பேரின் கால்களையும் நோக்கி 2 ரவுண்டு சுட்டார். இதில் அவர்களது 2 பேரின் கால்களிலும் தோட்டாக்கள் பாய்ந்து துளைத்தது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதையடுத்து அவர்கள் 2 பேரும் அதே இடத்தில் சுருண்டு விழுந்தனர். அதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக மங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல் ரவுடிகள் தாக்கியதில் காயம் அடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரா, ஏட்டு சுதீர் பூஜாரி, சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் ஆகியோரும் சிகிச்சைக்காக முக்கா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story