மனைவியும் பெண்தோழியும் தான் காரணம் - பேஸ்புக்கில் போஸ்ட் செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்
தனது தற்கொலைக்கு மனைவியும் பெண்தோழியும் தான் காரணம் என்று பேஸ்புக்கில் போஸ்ட் செய்துவிட்டு நபர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டத்தில் 45 வயது நபர் ஒருவர் தனது தற்கொலைக்கு மனைவியும் பெண்தோழியும் தான் காரணம் என்று பேஸ்புக்கில் போஸ்ட் செய்துவிட்டு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உள்ளூர் பத்திரிகையாளரான பாரத் மிஸ்ரா என்ற நபர் நேற்று மாலை கோவர்தன்விலாஸ் காவல் நிலையப் பகுதியில் உள்ள தனது பெண்தோழி பின்சி பரேராவின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். நேற்று மதியம் அவர், செல்போனில் பின்சியுடன் பேசும்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாலை அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பேஸ்புக்கில் அவர், தனது மனைவி கவுசல்யாவும் பெண்தோழி பின்சியும் தனது வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக போஸ்ட் செய்துள்ளார். இந்த நிலையில் அவரது மரணத்திற்கு இரு பெண்களும் காரணம் என்று போலீசார் கூறியுள்ளனர்.
தடயவியல் பரிசோதனைக்குப் பிறகு பாரத் மிஸ்ராவின் உடல் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.