கியூட் தேர்வை நீட், ஜே.இ.இ. தேர்வுகளுடன் இணைப்பது எப்போது? - பல்கலைக்கழக மானிய குழு தலைவர் விளக்கம்
கியூட் தேர்வை நீட், ஜே.இ.இ. தேர்வுகளுடன் இணைப்பது எப்போது என்பது குறித்து பல்கலைக்கழக மானிய குழு தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளில் சேருவதற்காக 'கியூட்' என்ற பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. முதல் முறையாக, கடந்த ஜூலை மாதம் இத்தேர்வு நடந்தது.
ஆனால், தொழில்நுட்ப குளறுபடிகள் காரணமாக, பல்வேறு மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. பல இடங்களில், தேர்வு மையத்துக்கு வந்த பிறகு தேர்வு ரத்தானதை அறிந்து மாணவர்கள் திரும்பி சென்றனர். இதன் 4-ம் கட்ட தே்ாவு இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
இதற்கிடையே, மருத்துவத்துக்கு நீட் தேர்வு, என்ஜினீயரிங் படிப்புக்கு ஜே.இ.இ., மத்திய பல்கலைக்கழகங்களுக்கு கியூட் தேர்வு என தனித்தனியாக நுழைவுத்தேர்வு எழுத வேண்டி இருப்பதால், மாணவர்களின் சுமையை குறைக்க இந்த தேர்வுகள் ஒன்றாக இணைக்கப்படும் என்று பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ் குமார் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்தநிலையில், இதுதொடர்பாக ஜெகதீஷ் குமார் நேற்று ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தேசிய கல்விக் கொள்கைப்படி, ஒன்றுக்கு மேற்பட்ட நுழைவுத்தேர்வுகளை எழுத வேண்டிய நிலையில் உள்ள மாணவர்களின் சுமையை குறைக்க ஒரே நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆனால், அதற்கு நன்கு திட்டமிட வேண்டும். அது ஒரு பெரிய பணி. ஆகவே, நாங்கள் அவசரப்படவில்லை.
நுழைவுத்தேர்வுகளை இணைப்பதற்கான நடைமுறைகளும் இன்னும் வகுக்கப்படவில்லை. முதலில், இம்மாத இறுதிக்குள் ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும். அது உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளை ஆய்வு செய்யும்.
அடுத்த ஆண்டு, பொதுவான நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்துவதாக இருந்தால், அதன் பணிச்சுமையை கருதி இப்போதே தயார்படுத்தலை தொடங்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட அனைத்துதரப்பினரிடையே கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும். பாடத்திட்டம் தொடர்பான விவகாரங்களுக்கு தீர்வு காண்பது முக்கியமான பிரச்சினை.
'கியூட்' தேர்வு தொழில்நுட்ப குளறுபடிகளை பொறுத்தவரை, இது பின்னடைவு அல்ல. ஒரு பாடம். விரைவில் இதற்கு தீர்வு காணப்படும். அதன் விரிவாக்க திட்டங்களுக்கோ, நுழைவுத்தேர்வுகள் இணைப்பு திட்டத்துக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர் கூறினார்.