10 சதவீத இட ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு உமா பாரதி வரவேற்பு - தனியார் துறையிலும் அமல்படுத்த கோரிக்கை


10 சதவீத இட ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு உமா பாரதி வரவேற்பு - தனியார் துறையிலும் அமல்படுத்த கோரிக்கை
x

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீடு அரசியலமைப்பின் கட்டமைப்பை மீறவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் இன்று கூறப்பட்டுள்ளது.

போபால்,

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் இன்று கூறப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைக் கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. அரசியல் சாசனத்தின் 103-வது திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனப் பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், அரசியல் சாசனத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டன.

இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.ரவீந்திர பட், பேலா எம்.திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வில் வாசிக்கப்பட்டது. நீதிபதிகள் தனித்தனியாகத் தீர்ப்புகளை வாசித்தனர்.

அந்தத் தீர்ப்பில், ``103-வது அரசியலமைப்புச் திருத்தம் செல்லுபடியாகும். இந்தச் சட்டத் திருத்தம் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மீறவில்லை.பொருளாதார அளவுகோல் அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது செல்லுபடியாகும்.

ஆனால் பிற்படுத்தப்பட்டவர்களைத் தவிர்ப்பது அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதாகும். பாரபட்சமற்ற ஆட்சிக்கு சாதி, வர்க்க வேறுபாடின்றி எல்லா ஏழைகளும் சமமானவர்கள்" என்று கூறி மூன்று நீதிபதிகள் 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும்" என்று தெரிவித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உமாபாரதி வரவேற்றுள்ளார்.

அரசு வேலைகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதிபடுத்தியிருப்பதை அவர் வரவேற்றார். தனியார் துறையிலும் 10% இட ஒதுக்கீடு கொண்டுவர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி உமாபாரதி வெளிய்ட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "எல்லா ஏழைகளும் ஒரே சாதி தான், அது 'ஏழை' என்ற சாதி. இந்த இடஒதுக்கீடு நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தும்.உலகில் உள்ள அனைத்து ஏழை மக்களும் ஒன்றிணைந்து தங்களுக்கான சிறந்த வாழ்க்கைக்காக போராட வேண்டும்" என்று தெரிவித்தார்.


Next Story