நாட்டில் 2030ம் ஆண்டுக்குள் 220 விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருக்கும் - விமான போக்குவரத்து துறை மந்திரி


நாட்டில் 2030ம் ஆண்டுக்குள் 220 விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருக்கும் - விமான போக்குவரத்து துறை மந்திரி
x

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் விமானங்கள் போக்குவரத்து பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புதுடெல்லி,

மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிர் ஆதித்யா சிந்தியா, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் விமானங்கள் போக்குவரத்து பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உள்நாட்டில் விமான சேவையை அதிகரிக்க, ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் முதல் விமான சேவையை நேற்று மந்திரி ஜோதிர் ஆதித்யா சிந்தியா தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உதான் யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் 1,93,000 விமானங்கள் பயன்பாட்டிற்கு சாத்தியப்படக்கூடிய அளவிலான நிதியின் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளன. உதான் யோஜனா திட்டத்தின் கீழ் சில டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தையும் அரசே ஏற்கும்.

2027ஆம் ஆண்டுக்குள் 40 கோடி விமானப் பயணிகளும், 1,200 விமானங்களையும், 2030ஆம் ஆண்டுக்குள் 220 விமான நிலையங்களையும் இந்தியா கொண்டிருக்கும்.

இதற்கு முன், 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன, கடந்த 8 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது. 2030-க்குள் 220 விமான நிலையங்களாக உயர்த்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 15 சதவீத திறன் அல்லது 100 முதல் 110 விமானங்களை சேர்க்க உள்ளோம். 2027ஆம் ஆண்டுக்குள் 1,200 விமானங்களை இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உதான் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, இரண்டாம் மற்றும் மூன்றாம் வகை நகரங்களில், மேம்பட்ட விமான உள்கட்டமைப்பு மற்றும் விமான இணைப்பு சேவைகளை சாமானிய மக்களுக்கும் வழங்குவதற்காக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.


Next Story