பாகிஸ்தான், சீனா குடியுரிமை பெற்றுச்சென்ற எதிரிகளின் ரூ.1 லட்சம் கோடி சொத்துகளை விற்க நடவடிக்கைமத்திய அரசு தீவிரம்
பாகிஸ்தான், சீனாவின் குடியுரிமை பெற்றுச்சென்ற எதிரிகளின் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை விற்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.
புதுடெல்லி,
பாகிஸ்தான், சீனாவின் குடியுரிமை பெற்றுச்சென்ற எதிரிகளின் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை விற்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் சீனாவின் குடியுரிமை பெற்று, இந்தியாவில் இருந்து தப்பியவர்கள் ஏராளமான அசையா சொத்துகளை இங்கே விட்டுச்சென்றிருக்கிறார்கள்.
இப்படி 12 ஆயிரத்து 611 சொத்துகள் விட்டுச்செல்லப்பட்டுள்ளன. ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான இந்த சொத்துகள் எதிரி சொத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த எதிரியின் சொத்துகள், சி.இ.பி.ஐ. என்று அழைக்கப்படுகிற இந்திய எதிரி சொத்து பாதுகாவலர் பொறுப்பில் விடப்பட்டுள்ளன. இதற்காக நமது நாட்டில் எதிரி சொத்து சட்டம் என்று ஒரு தனிச்சட்டமே உள்ளது.
நாட்டை விட்டுச்சென்றவர்கள், விட்டுச்சென்ற சொத்துகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சம் வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்த சொத்துகள் மாவட்ட கலெக்டர்கள், துணை கலெக்டர்கள் உதவியுடன் விற்கப்படும். எதிரி சொத்துகள் ஒவ்வொன்றும் ரூ.1 கோடியில் இருந்து ரூ.100 கோடி வரையிலான மதிப்பு உடையவை ஆகும்.
இந்த சொத்துகள் மின்னணு ஏலம் அல்லது பிற வகைகளில் விற்பனை செய்யப்படும். இதற்கான நடவடிக்கையை 'மெட்டல் ஸ்கிராப் டிரேட் கார்ப்பரேசன்' என்றழைக்கப்படுகிற நிறுவனம் மேற்கொள்ளும். இதற்கு முன்பு எதிரி சொத்துகளை விற்பனை செய்ததின்மூலம் மத்திய அரசு ரூ.3,400 கோடி திரட்டி உள்ளது.
தற்போது நாட்டின் 20 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பரவியுள்ள எதிரிகளின் 12 ஆயிரத்து 611 சொத்துகள்தான் விற்பனை செய்யப்பட உள்ளன. எதிரிகளின் சொத்துகள் அதிக எண்ணிக்கையில் (6,255) உத்தரபிரதேசத்தில் தான் உள்ளன. தமிழ்நாட்டில் 67 சொத்துகள் உள்ளன.