மழை பாதித்த இடங்களில் மத்திய மந்திரி ஷோபா கரந்தலாஜே ஆய்வு


மழை பாதித்த இடங்களில் மத்திய மந்திரி   ஷோபா கரந்தலாஜே ஆய்வு
x

சிக்கமகளூருவில், மழை பாதித்த இடங்களில் மத்திய மந்திரி ஷோபா கரந்தலாஜே நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்று தருவதாக உறுதியளித்தார்.

சிக்கமகளூரு;

மழையால் பாதிப்பு

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடலோர, மற்றும் மலைநாடு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கிறது. சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதியில் வீடுகளுக்குள் மழை வெள்ளம் சூழ்ந்தும், பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டும் உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மந்திரி ஷோபா ஆய்வு

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சிக்கமகளூரு மாவட்டத்தில் மூடிகெரே, சிருங்கேரி உட்பட்ட பகுதிகளில் மழை பாதித்த இடங்களில் மத்திய மந்திரி ஷோபா கரந்தலாஜே நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

அதன்படி கொப்பா தாலுகா அலகேஷ்வரா கிராமத்தை சேர்ந்த வசந்தா என்பவரின் வீடு மழை வெள்ளத்தில் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. அங்கு சென்ற ஷோபா இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர், அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கும்படியும், மேலும் வேறு இடத்தில் புதிய வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

இதேபோல் சிருங்கேரி தாலுகா மெனசே கிராமத்தில் உள்ள பாலம் ஒன்று இடிந்து கிடப்பதை பார்வையிட்டார். பின்னர் மூடிகெரே தாலுகா அரேனூர் கிராமத்தில் உள்ள காபி தோட்டத்திற்குள் மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளையும் ஆய்வு செய்தார்.

காபி தோட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி அரசு நிவாரணம் பெற்று தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து என்.ஆர்.புரா தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை மத்திய மந்திரி ஷோபா நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது அவருடன் சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேஷ், போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா, மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பிரபு, முதல்-மந்திரி அரசியல் செயலாளர் ஜீவராஜ் ஆகியோர் இருந்தனர்.


Next Story