மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரியுடன் சென்ற கார்கள் மீது தாக்குதல்


மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரியுடன் சென்ற கார்கள் மீது தாக்குதல்
x

மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரி நிசித் பிரமாணிக் உடன் சென்ற கார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நாட்டு வெடிகுண்டுகளும் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய மந்திரி

மேற்கு வங்காள மாநிலத்தில் அடுத்த மாதம் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் கூச்பிகார் மாவட்டம் சாகிப்கஞ்ச் பகுதியில் உள்ள வட்டார மேம்பாட்டு அலுவலத்தில் நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனையை பார்வையிடுவதற்காக மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி நிசித் பிரமாணிக் சென்றார். அப்போது மத்திய மந்திரி உடன் சென்ற கார்கள் மீது கல் வீசித் தாக்கப்பட்டது. நாட்டு வெடிகுண்டுகளும் வீசப்பட்டன.

'திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக அறிந்து வட்டார மேம்பாட்டு அலுவலகத்துக்கு சென்ற எங்கள் வாகன அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எங்கள் தொண்டர்களையும் திரிணாமுல் கட்சியினர் தாக்கினர். இவை அனைத்தையும் போலீசார் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது வெட்ககரமானது' என்று குற்றம்சாட்டியுள்ள நிசித் பிரமாணிக், 'மத்திய படைகளின் முன்னிலையில் பஞ்சாயத்து வேட்புமனு பரிசீலனை நடைபெற்றால்தான் சரியாக இருக்கும்' எனவும் கூறியுள்ளார்.

திரிணாமுல் மறுப்பு

ஆனால் மத்திய மந்திரி நிசித் பிரமாணிக்கின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. அந்த கட்சி தலைவர்களில் ஒருவரும், மாநில மந்திரியுமான உதயன் குகா, 'மாநிலத்தில் அமைதியைக் குலைப்பதற்கு பா.ஜ.க.தான் அதன் தொண்டர்களை தூண்டிவிடுகிறது' என்று கூறியுள்ளார்.

இதுவரையிலான வன்முறையில்...

மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் தொடர்பான வன்முறையில் இதுவரை 5 பேர் கொல்லப்பட்டிருப்பதும், ஏராளனமானோர் காயம் அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story