மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாளை மங்கோலியா பயணம்


மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்  நாளை மங்கோலியா பயணம்
x

கோப்புப்படம்

இந்திய பாதுகாப்பு மந்திரி ஒருவர் மங்கோலியாவிற்கு பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும்.

புதுடெல்லி:

கிழக்கு ஆசிய நாடுகளுடனான கேந்திர கூட்டுமுயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் செப்டம்பர் 5 முதல் 7 வரையில் அரசுமுறைப் பயணமாக மங்கோலியா செல்லவிருக்கிறார்.

இந்திய பாதுகாப்பு மந்திரி ஒருவர் மங்கோலியாவிற்கு பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும். இரு நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கேந்திர கூட்டுமுயற்சியை மேலும் மேம்படுத்துவதற்கு இந்தப் பயணம் வழிவகை செய்யும்.

தமது பயணத்தின் போது மங்கோலியா நாட்டின் பாதுகாப்பு மந்திரி லெஃப்டினன்ட் ஜென்ரல் சைகான்பயருடன் ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வார். மங்கோலிய அதிபர் மேதகு யூ. குரெல்சுக், அந்நாட்டு நாடாளுமன்ற சபைத் தலைவர் மேதகு ஜி. ஜண்டன்ஷாடர் ஆகியோரையும் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேச உள்ளார்.

இந்தியாவும் மங்கோலியாவும் கேந்திர கூட்டுமுயற்சியை பகிர்வதோடு அதில் ராணுவம் முக்கியத் தூணாக விளங்குகிறது. இருதரப்பு பேச்சு வார்த்தையின் போது இரு நாடுகளின் பாதுகாப்பு மந்திரிகளும் இந்தியா மற்றும் மங்கோலியா இடையேயான ராணுவ ஒத்துழைப்பை ஆய்வு செய்வார்கள். இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு புதிய முன்முயற்சிகள் குறித்தும் ஆலோசனை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story