லடாக் யூனியன் பிரதேச நிறுவன நாள் கொண்டாட்டம்; ஜனாதிபதி பங்கேற்பு
லடாக் யூனியன் பிரதேசத்தின் நிறுவன நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று பிற்பகல் லே நகரை சென்றடைந்து உள்ளார்.
லடாக்,
சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தில், நாடு முழுவதும் லடாக் நிறுவன நாள் மற்றும் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தின் நிறுவன நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு, சிறப்பு விமானத்தில் புறப்பட்டு இன்று மதியம் லே நகரை சென்றடைந்து உள்ளார்.
அவரை ராணுவ உயரதிகாரிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதுபற்றி பா.ஜ.க. எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, பெரிய ஆர்வத்துடன் தேசிய ஒற்றுமை தினம் நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது.
லடாக்கை பிரதமர் மோடி யூனியன் பிரதேசம் என்று அறிவித்திருக்கிறார். லடாக் நிறுவன நாளை மக்கள் கொண்டாடி கொண்டிருக்கின்றனர். இதனை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு லடாக்கிற்கு வருகை தந்துள்ளார். அவர் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து, நவம்பர் 1-ந்தேதி (நாளை) சியாச்சின் ராணுவ தளத்திற்கு முர்மு செல்ல இருக்கிறார். இதன்பின்னர், ராணுவ வீரர்களுடன் அவர் உரையாடவும் உள்ளார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு லே நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.