வாரணாசி கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து


வாரணாசி கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து
x

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இன்று காலை 34 பேருடன் சென்ற படகு கங்கை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வாரணாசி,

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இன்று காலை 34 பேருடன் சென்ற படகு கங்கை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய ஒரு பெண் உட்பட இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் இருவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இன்று காலை 07.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. படகு கங்கை ஆற்றில் கெடாகாட் அருகே சென்று கொண்டிருந்த போது கவிழ்ந்தது. படகில் அதிக பாரம் ஏற்றப்பட்டதாகவும், இதனால் படகிற்குள் தண்ணீர் நிரம்பியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தன்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள படகோட்டி ஆற்றில் குதித்து தப்பிச் சென்றார்.

படகில் இருந்த பயணிகள் அனைவரும் உயிர் பயத்தில் அலறினர். இதையடுத்து உடனடியாக அப்பகுதியில் இருந்த உள்ளூர் மாலுமிகளுடன் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படகில் இருந்த 34 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ஏசிபி அவதேஷ் குமார் பாண்டே கூறும்போது, விபத்தில் எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் சரியான நேரத்தில் மீட்கப்பட்டனர். பயணிகளில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.


Next Story